Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

மூழ்கும் ஜோஷிமத்; பருவநிலை மாற்றம் ஒரு காரணமா?

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலை வாழிடமான ஜோஷிமத் கடந்த சில நாட்களாக புதிய நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஆம், இங்குள்ள குடியிருப்புக் கட்டிடங்கள் விரிசல் அடைந்து, ஆங்காங்கே ஊற்றுகள் பொங்கி வெளியேற தொடங்கியுள்ளன. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதுவரை 600 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில் இந்திய ராணுவ கண்காணிப்பு கோபுரங்கள் நிறைய உள்ளன. இவற்றில், 20 கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டதால், ராணுவத்தினரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஜோஷிமத் மக்களுக்கு 45 கோடி ரூபாய் மதிப்பிற்கு நிவாரண உதவியை உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. அதேசமயம், இந்த பிராந்தியத்தில் மேற்கொண்டு வரும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தும்படி உள்ளூர் மக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

ஜோஷிமத் பகுதியில் அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் மின் சக்தி உற்பத்தித் திட்டத்தால்தான் இந்த பாதிப்பு நிகழ்ந்துள்ளதாகவும், ஜோஷிமத் மூழ்குவதால், இந்த திட்டப் பணிகளை உடனே நிறுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இமயமலையின் கார்வல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் மலையேறுவோருக்கும், யாத்ரீகர்களுக்கும் இளைப்பாற முக்கிய இடமாக உள்ளது. இந்த சரிவான மலை வாழிடத்தில் சுமார் 20,000 மக்கள் வரை வசித்து வந்தனர். முறையான திட்டமிடல் இன்றி கட்டுப்பாடுகளும் இன்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஜோஷிமத் நெருக்கடி மிகுந்ததாக மாறியுள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில், National Thermal Power Corporation’s Tapovan Vishnugad Hydro Power Project பணிகள் முடுக்கிவிடப்பட்டதால், ஜோஷிமத் புதைகுழியாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழலும் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு சீர்கெட்டுள்ளதாக, மக்கள் தெரிவிக்கின்றனர். 

‘’நாம் எந்தளவுக்கு சுற்றுச்சூழலை பாழ்படுத்தியுள்ளோம் என்பதற்கும், அதனை மீட்டெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ஜோஷிமத் நிகழ்கால எடுத்துக்காட்டாக உள்ளது,’’ என்று அஞ்சல் பிரகாஷ், Research Director and Adjunct Associate Professor, and Lead Author for IPCC reports, குறிப்பிடுகிறார். ஜோஷிமத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர் மின் சக்தி உற்பத்தித் திட்டம்தான் இந்த பிரச்னைக்கு தலையாய காரணம் எனவும் அவர் கூறுகிறார். 

‘’ஜோஷிமத் பிரச்னையில் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. ஒன்று, இமயமலை போன்ற ஒரு திடமற்ற மலைப் பிரதேசத்தில் முறையான திட்டமிடல் ஏதுமின்றி ஒழுங்கற்ற வகையில் மளமளவென ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு பணிகளால், சுற்றுச்சூழல் முற்றிலும் சீர்கெட்டுவிட்டது. இரண்டாவதாக, பருவநிலை மாற்றம் மிகப்பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 2021, 2022ம் ஆண்டுகளை உத்தரகாண்ட் மாநிலத்தின் பேரழிவு காலம் என்று கூட கூறலாம்.  

இதுதவிர, திடீரென ஏற்படும் கனமழை அதையொட்டி வரும் நிலச்சரிவு போன்றவை சமீப நாட்களில், ஏராளமாக பதிவாகியுள்ளது. ஜோஷிமத் போன்ற மலைப் பிரதேசங்களில் எதிர்பாராத வகையில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் கவலை அளிப்பவையாக உள்ளன. இவற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இதுபோன்ற இலகுவான மண் நிறைந்த மலைப் பிரதேசங்களில் சுற்றுச்சூழல் மீது அக்கறை இன்றி நாம் செய்யும் சிறு தவறுகள் கூட பேரழிவுகளை ஏற்படுத்திவிடும். அதற்கு ஜோஷிமத் நம் கண் முன்னே உள்ள உதாரணம்,’’ என்று பிரகாஷ் தெரிவித்தார். 

ஜோஷிமத் பேரழிவில் புவியியல் சார்ந்த மற்றும் பருவநிலை சார்ந்த மாற்றங்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

‘’இமயமலை மத்தியில் அமைந்துள்ள ஜோஷிமத்தில் இத்தகைய ஒரு நெருக்கடி ஏற்பட பருவநிலை மாற்றமும் ஒரு தவிர்க்க முடியாத காரணமாக அமைந்துவிட்டது. ஏற்கனவே இந்த பிராந்தியம் உலக வெப்பமயமாதலில் சிக்கியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. அடுத்தப்படியாக, கன மழை, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்டவை கடந்த 20 ஆண்டுகளாக, இமயமலை பிராந்தியத்தில் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. இதற்கும் பருவநிலை மாற்றம் முதன்மை காரணம்,’’ என்று CFC ஆலோசகர் மற்றும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற ஆய்வாளர் டாக்டர் பார்த்தா ஜோதி தாஸ் தெரிவிக்கிறார். 

இயற்கை சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் ஆறுகள் என அனைத்தையும் சீரழித்த காரணத்தால், நமக்கு ஏற்படும் புவியியல் பாதிப்புகளின் தாக்கமும் மிகப்பெரியதாக உள்ளது. எனவே, சமீபகாலமாக, ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றமும் ஜோஷிமத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு ஒரு காரணமாக உள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது. அவசர கதியில் அணைகள், சுரங்கங்கள், குடியிருப்புக் கட்டிடங்கள் போன்றவற்றை முறையான திட்டமிடல் இன்றி ஏற்படுத்தியதும் இந்த பருவநிலை மாற்றத்துடன் இணைந்து, தற்போது ஜோஷிமத் சீரழிவை பெரிதுபடுத்திவிட்டன,’’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

‘’கட்டிடங்களில் விரிசல் ஏற்படுவதால், ஜோஷிமத் பகுதி குடியிருக்க தகுதியற்ற ஒன்றாக மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது. முறையான மண் பரிசோதனை, விஞ்ஞானப் பூர்வமாக நடத்தி, மண்ணின் தரம் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ப, பாதிப்புகள் ஏற்படுத்தாத வகையில் குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட அனைத்துக் கட்டுமானப் பணிகளும் இனி அங்கே மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்க முடியும்,’’ என்று டாக்டர் சுஷில் குமார், முன்னாள் பேராசிரியர், Wadia Institute of Himalayan Geology (WIHG), டேராடூன், நமக்கு தெரிவித்தார். 

‘’1951 – 2014 வரையான காலக்கட்டத்தில், உலக வெப்பமயமாதல் காரணமாக, இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமி பகுதியின் சராசரி வெப்பநிலை 0.2 டிகிரி அளவு உயர்ந்துள்ளதாக, இமயமலை தொடர்பான சமீபத்திய ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. இதனால், பருவநிலை மாற்றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறுகிறது. பருவநிலை மாற்றம் பெரும்பாலும்  மிகக்கடுமையான மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. அதனால், நிலச்சரிவு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இது மட்டுமின்றி, இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அன்றாட நிகழ்வாக  மாறிவிட்டது. இதன் நீட்சியாக, எந்த அக்கறையும் இன்றி சுற்றுச்சூழலை சுரண்டும் வகையில் செயல்பட்டதால், ஜோஷிமத் போன்ற பல இடங்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. இதற்குப் பிறகும், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் தொடர்பான விதிமுறைகளை இந்திய அரசு கடுமையாக மாற்றுவதுடன், சட்ட திட்டங்களையும் நிர்ணயிக்காமல் நாம் அக்கறை இன்றி செயல்படும் பட்சத்தில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது,’’ என்று டாக்டர் பார்த்தா தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.

Translated By: Parthiban S

Also, read this in English

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10