Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

எலெக்ட்ரிக் வாகனங்கள் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறைந்தவை என்ற தகவல் உண்மையா?


வதந்தி 

எலெக்ட்ரிக் வாகனங்கள் (EVs) செயல் திறன் குறைவானவை மற்றும் வழக்கமான (பெட்ரோல், டீசல் என்ஜின்) வாகனங்களை விட அதிக எடை கொண்டுள்ளதால், இவற்றை இயக்க அதிக எரிபொருள் தேவை. 

உண்மை 

அதிக எடை காரணமாக, விபத்து காலங்களில் கார் நசுங்குவது போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு. எடை அதிகமாக இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்தில் நல்ல பலன் தரக்கூடியவை. 

பலரும் கூறுவது என்ன?


வழக்கமான கார்களை விடவும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் எடை அதிகம் கொண்டிருப்பதால், அவை பாதுகாப்பானவை இல்லை என்று சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. பெட்ரோல்- டீசலில் இயங்கும் கார்களை விடவும், இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக எடை கொண்டுள்ளதால், எரிபொருள் சிக்கனத்திற்கு வாய்ப்பில்லை.  

நாம் கண்டறிந்த உண்மை

எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகள் அதிக எடை கொண்டுள்ளதால், இவ்வகை வாகனங்கள் வழக்கமான வாகனங்களை விட எடை மிகுந்ததாக உள்ளன. இல்லாவிட்டால், இதுவும் மற்ற பெட்ரோல், டீசல், சிலிண்ட கார்களை போன்றே எடை குறைவானதாக இருக்கும். சுமார் 600 கி.மீ., வரை செல்ல தேவையான ஆற்றலை சேமித்து வைக்கக்கூடிய வகையில் ஏராளமான பேட்டரிகளை இவ்வகை கார்களில் பொருத்த வேண்டிய கட்டாயம், வாகன தயாரிப்பாளர்களுக்கு உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் கார்களோ, 60 லிட்டருக்குள் கொள்ளளவு கொண்ட டேங்க் மட்டுமே கொண்டிருக்கும். எனவே, வேண்டிய தொலைவு எளிதாக பயணிக்க முடியும். வழியில், எரிபொருள் தீர்ந்தாலும், நிரப்பிக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் Tesla Model X போன்ற ஒரு கார், தனது ஆற்றல் தேவைக்காக, 500 கிலோவுக்கும் மேலான எடை கொண்ட பேட்டரிகளை தன்னுள்ளே சுமக்க வேண்டியுள்ளது.

அதிக எடை, அதிக நிலைத்தன்மை

ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தைப் பொறுத்தவரை, பேட்டரி செல் ஒரு டியூப் போன்ற வடிவில், நீண்ட குழாய் போல, காரின் ஒட்டுமொத்த நீளத்திற்கும் இருப்பதாக, சீட்களுக்கு அடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு பேட்டரியை பொருத்துவதால், பலவித நன்மைகள் உள்ளன. முதலில், காரின் அடியில் பேட்டரி இருப்பதால், தேவையற்ற சுமை தவிர்க்கப்படுகிறது. 

மேலும், புவி ஈர்ப்பு விசையின் ஆதிக்கத்தை சமாளிக்க உதவுகிறது. இதனால், விபத்து ஏற்படும்போது, இவ்வகை கார்கள் கவிழாமல் முடிந்தவரை நேராகவே சமாளித்து நிற்கக்கூடியவை. கடுமையான விபத்தாக இருந்தாலும், பெட்ரோல், டீசல் கார்களில் ஏற்படுவதை விட, இவற்றில் பாதிப்பு குறைவாகத்தான் ஏற்படும். அடுத்தப்படியாக, சீட்டுக்கு அடியில் பேட்டரி வைப்பது, ஆற்றல் சேமிக்கப்படுவதால், நமக்கு காரின் உள்ளே நிறைய காலியிடம் கிடைக்கிறது. ஆம், வழக்கமான கார்களில் இருப்பதைப் போல, எரிபொருள் டேங்க், என்ஜின், கியர் பாக்ஸ், எரிபொருள் பம்ப் போன்ற எதுவும் இதில் இருக்காது. எனவே, அதிக இடம் உள்புறம் காலியாக இருப்பதால், இந்த இடத்தை பயன்படுத்தி, கார் வடிவமைப்பாளர்கள், பொருள் வைத்துக் கொள்ள இடம் ஏற்படுத்துவது மற்றும் உள்புற இருக்கை போன்றவற்றில் புதுமையை புகுத்த வாய்ப்பு கிடைக்கிறது. 

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்கள் எடை குறைவாக தயாரிக்கப்படுமா? 

கண்டிப்பாக, ஆம் என்பதுதான் பதில். ஒட்டுமொத்த எடையில், ஒவ்வொரு 10% குறைக்கும்போதும், கார்களின் எரிபொருள் பயன்பாட்டில் 6% முதல் 8% வரை சேமிக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. எனவே, கார் வடிவமைப்பாளர்கள் முடிந்த அளவுக்கு இலகு ரக பொருட்கள் பயன்படுத்தி, அவற்றின் ஒட்டுமொத்த எடையை குறைத்து, அதிக மைலேஜ் கிடைக்கச் செய்யும் வகையில், புதுப்புது யோசனைகளை செயல்படுத்தி வருகின்றனர். 

எதிர்காலத்தில், வாகனங்களின் சேசீஸ், சஸ்பென்ஸன், சக்கரங்கள் உள்ளிட்டவற்றில் இரும்புக்குப் பதிலாக, மெக்னீசியம் பயன்படுத்த கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இரும்பை விட, மெக்னீசியம் 75% எடை குறைவு என்பதோடு, அவற்றை மறுசுழற்சி செய்ய முடியும். இதுபோலவே, மின்சார வாகனங்களில் மெக்னீசிய பேட்டரிகளை பொருத்தவும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், நீண்ட தொலைவு எளிதில் செல்லவும், அதிக ஆற்றல் சேமிக்கவும் கூடிய பேட்டரிகள் கொண்ட கார்கள் நமக்குக் கிடைக்கும். 

எடை குறைக்க சாத்தியம் உள்ளதா?

வேதியியல் துறைகளில் நடைபெற்று வரும் புதுப்புது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காரணமாக, தற்போது solid-state பேட்டரிகள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால், எதிர்காலத்தில், இத்தகைய பேட்டரிகள் கார்களுக்கும் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலமாக, கார்களின் ஒட்டுமொத்த எடை பெரிதும் குறையும். மேலும், அவசர காலத்தில் உதவும் வகையில் ஆட்டோமேட்டிக் பேக்கிங் வசதியை பயன்படுத்தினால் பேட்டரி வாகனங்களின் சாலைப் பயன்பாடு பன்மடங்கு உயரும். 

பேட்டரி வாகனங்கள் எடை அதிகமாக உள்ளது நல்லதா?

புதுப்புது பொருட்களின் வரவால், வாகன தொழில்துறையின் எதிர்காலம் பெரிய மாற்றத்தைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வாகனங்களுக்கும், வாகன உற்பத்தியாளர்களுக்கும் மாற்றம் அளிப்பதாக அமையக்கூடும். எடை குறைந்த இலகு ரக பொருட்கள், குளிர், வெயில் மற்றும் கடுமையான வானிலை பாதிப்புகளை சமாளிக்கக்கூடிய வகையில் நீடித்து உழைக்கும் பொருட்கள் போன்றவை இங்கே குறிப்பிட வேண்டிய மாற்றம். 

எடை குறைப்பது பற்றி பலவிதமான விவாதங்கள், ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும், மறுபுறம், எளிமையான இயற்பியல் தத்துவப்படி எடை அதிகம் கொண்டிருப்பதால், விபத்து காலத்தில் பேட்டரி வாகனங்கள் அதிக சேதமடையாமல் தாக்குப் பிடிக்கின்றன. 

காருக்கு சேதம் ஏற்படும் வாய்ப்பு குறைவதோடு, காரின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதும் குறைகிறது. இதற்கு, காரின் அதிக எடையும் முக்கிய காரணம். குத்து மதிப்பாக, நாம் இதைக் கூறவில்லை. சமீபத்திய இன்சூரன்ஸ் விண்ணப்பங்கள் இதற்கு சரியான உதாரணமாக உள்ளன. ஆம், மற்ற எரிபொருள் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், பேட்டரி வாகனங்களில் ஏற்படும் விபத்து சேதம் குறைவாக உள்ளது என்று, இன்சூரன்ஸ் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன. 

அதிக எடை இருந்தாலும், எரிபொருள் சிக்கனத்தில் பேட்டரி வாகனங்கள் கெத்து

மின்னாற்றலில் இயங்கக்கூடிய உதிரிபாகங்களை கொண்டுள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு குறைவாகவே உள்ளது. ஏனெனில், எலெக்ட்ரிக் திறனை பகுதியாக அல்லது முழுவதுமாக சார்ந்து இயங்கும் வகையில், இந்த வாகனங்கள் வடிவமைக்கப்படுவதால், மற்ற வகை வாகனங்களை விட, எரிபொருள் சேமிப்பு கிடைக்கிறது. மற்ற வாகனங்களில் லிட்டருக்கு எத்தனை கிலோ மீட்டர் செல்கிறது என்பதன் அடிப்படையில் எரிபொருள் பயன்பாடு கணக்கிடப்படுகிறது. எலெக்ட்ரிக் கார்களில், இதுவே, ஒரு கிலோ வாட் மின்னாற்றலுக்கு எத்தனை கிலோ மீட்டர் செல்கிறது என்பதன் அடிப்படையில் மைலேஜ் கணக்கிடப்படுகிறது. இதன்படி பார்த்தால், தற்போது சந்தையில் விற்கப்படும் அனைத்து இலகு ரக எலெக்ட்ரிக் கார்களும், 25 முதல் 40 கிலோ வாட் மின்னாற்றலுக்கு, 100 மைல்கள் வரை (160 கி.மீ.,) தரக்கூடியவையாக உள்ளன. இது பெட்ரோல், டீசல் ரக வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க எரிபொருள் சேமிப்புதான். 

இதன்மூலமாக, நமக்கு தெரியவருவது என்னவெனில், எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார்கள்தான் வாகன சந்தையில் கோலோச்சப் போகின்றன. தேவை அதிகரிக்கும்பட்சத்தில் அதற்கேற்ப, எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியின் எடை கண்டிப்பாகக் குறைக்கப்படும். அப்போது, இவ்வகை கார்களின் எடையும் குறைந்து, கூடுதல் மைலேஜ் தரக்கூடிய வகையில் இருக்கும் என்றால் அது மிகையல்ல.

(with inputs from Aaysuhi Sharma) 

Translated by Parthiban S


Also, read this in English

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10