Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

பருவநிலை மாற்றம் பற்றி அக்கறை இல்லாத இந்தியா? புதைபடிம எரிபொருள் எடுக்க மரங்களை வெட்டித் தள்ளும் அவலம்! 

துளியும் சுற்றுச்சூழல் அக்கறை இன்றி புதைபடிம எரிபொருட்களில் முதன்மையான நிலக்கரியை வெட்டி எடுப்பதே இந்தியாவின் முதன்மை இலக்காக உள்ளது. இதற்காக, கணக்கு வழக்கின்றி மரங்களை வெட்டி எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. இதுகுறித்து ஒரு விரிவான செய்தித் தொகுப்பை இங்கே பார்க்கலாம். 

காடுகளை அழித்து மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றம் பற்றி உலகம் முழுக்க பரவலான விவாதம் எழுந்துள்ளது. காடுகளை வேகமாக அழிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி பருவநிலை மாற்றமும் ஏற்படுகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் தங்களால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால், இந்தியாவிலோ அதுபற்றி எந்த கவலையும் இன்றி சத்தீஸ்கரில் உள்ள ஹஸ்தயோ (Hasdeo) என்ற இடத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக, ஆயிரக்கணக்கான மரங்களை எவ்வித ஈவு இரக்கமின்றி வெட்டித் தள்ளியுள்ளனர். 


2022 செப்டம்பர் 28 அன்று, ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதுபற்றி ஒரு செய்தி வெளியிட்டுளளது. அந்த செய்தியில், ‘உள்ளூர் மக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரின் கடும் எதிர்ப்பையும் மீறி சத்தீஸ்கர் வனத்துறை சார்பாக Parsa East Kente Basan (PEKB) நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, Hasdeo Arand பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. பல்லுயிர்ச்சூழல் செறிந்து காணப்படும் அங்கே நிலக்கரி சுரங்கம் அமைப்பதை எதிர்த்து ஏராளமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. அவற்றையும் மீறி இந்த சுரங்கப் பணிகள் நடைபெறுகிறது,’ என்று எழுதப்பட்டுள்ளது. 

உள்ளூர் ஆட்சியர் (Deputy Commissioner) இதுபற்றி ஊடகங்களுக்கு கூறும்போது, ‘’புதிய நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக, அந்த பகுதியில் (PEKB) மரங்கள் வெட்டப்படவில்லை. அவை ஏற்கனவே அங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு பழைய சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக முறையான அனுமதி பெற்ற பிறகே வெட்டப்பட்டன,’’ என்று தெரிவித்தார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், அந்த செய்தியில் ’’Parsa Coal Mines என்ற பெயரை மேற்கோள் காட்டி, பொத்தாம் பொதுவாக, PEKB-2 பணிகளுக்குச் சில அந்நிய சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. உண்மையில், அது புதிதாக நிறுவப்படும் சுரங்கம் இல்லை. இது முற்றிலும் தவறான தகவல். அதேசமயம், PEKB-2 பிராந்தியத்தில் வாழும் மக்களிடம் இருந்து இதுதொடர்பாக எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்,’’ என்று துணை கண்காணிப்பாளர் பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

https://twitter.com/TribalArmy/status/1575558071312863233 Embed

இதுகுறித்து நாம் சத்தீஸ்கர் மாநிலத்தின் Bachao Andolan ஒருங்கிணைப்பாளர் அலோக் சுக்லா அவர்களிடம் பேசினோம். அவர் கூறுகையில், ‘’குறிப்பிட்ட இடத்தில் கிட்டத்தட்ட 43 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த 8000 மரங்கள் இதுவரை பாரபட்சமின்றி வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. உள்ளூர் கிராம பஞ்சாயத்துகளின் எதிர்ப்பையும் மீறி இந்த நிலக்கரி சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன,’’ என்றார். 

மேலும் அவர், ‘‘மத்திய அரசு தரப்பில், இந்த மரங்களை வெட்டியது, புதிய சுரங்கம் அமைப்பதற்கான பணி இல்லை என்றும், முறையான அனுமதியுடன்தான் நடைபெற்றது என்றும் பலவிதமான விளக்கம் அளிக்கப்பட்டாலும், மரங்கள் வெட்டப்பட்டது முற்றிலும் ஏற்புடையதல்ல,’’ என்றும் கூறினார்.  


‘’யதார்த்தம் என்னவெனில், இந்த நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக உள்ளூர் கிராம பஞ்சாயத்துகள் ஏற்கனவே பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன. ஆனால், அதைக்கூட பொருட்படுத்தாமல், அரசு இயந்திரம் தொடர்ந்து அப்பகுதியில் காடுகளை அழிப்பதற்கு அனுமதி அளித்து வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் போன்ற பிரச்னைகளை எதிர்த்து போராடும் சூழலில், இவ்வளவு மரங்களை ஒரே நேரத்தல் வெட்டித் தள்ளியது முற்றிலும் தவறு. புதிய சுரங்கம் அமைக்கவோ அல்லது பழைய சுரங்கத்தை விரிவுபடுத்தவோ எந்த காரணத்தை வேண்டுமானாலும் அரசு இயந்திரம் கூறலாம். ஆனால், இந்த செயல் துளிகூட ஏற்புடையதல்ல,’’ எனவும் சுக்லா குறிப்பிட்டார். 

காடுகள் அழிப்பு மற்றும் பருவநிலை மாற்றம் 

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் தொடர்பாக IPCC வெளியிட்ட ஒரு சிறப்பு அறிக்கையில் ,‘காடுகளை அழிப்பதால், தண்ணீர் தட்டுப்பாடு, வறட்சி மற்றும் உணவுத் தட்டுப்பாடு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது மட்டுமின்றி, பருவநிலை மாற்றமும் ஏற்படுகிறது. 

இதுதவிர IPCC வெளியிட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க அறிக்கையில், காடுகளை அழித்தல் மற்றும் காடுகளை திருத்துதல் போன்ற நிலத்தை பயன்படுத்தும் பணிகள், உலகின் ஒட்டுமொத்த கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுதலில், 10% பங்களிப்பை வழங்குகின்றன. 

World Economic Forum (WEF) சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் காடுகளை அழிப்பது மட்டுமே, உலக அளவில் நிகழும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் 15% பங்களிப்பு வழங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘’காடழிப்பு உலக CO2 வெளியேற்றத்தில் 15% பங்களிப்பு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், வெப்ப மண்டல காடுகளில் ஒரு கோடி ஹெக்டேர் அளவுக்கு காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனை 2030க்குள் நாம் நிறுத்தாவிட்டால், உலக வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸ் குறைப்பது என்பது இயலாத காரியமாகிவிடும்,’’ என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Global Forest Watch வெளியிட்ட ஒரு அறிக்கையில், 2001-2020 வரையான காலத்தில், இந்தியா இதுவரை 19.30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு இருந்த மரங்களை இழந்துள்ளது. இது கிட்டத்தட்ட 951 மெட்ரிக் டன் கார்பன் டை ஆக்ஸைடு அளவுக்கு இணையானதாகும். இந்தியா முழுக்க நடப்பாண்டில் பல்வேறு இடங்களில் பருவநிலை மாற்றம் காரணமாக, அனல் காற்று வீசி பாதிப்பு ஏற்படுத்தியதோடு, வறட்சிக்கு ஒப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஆண்டு, பருவமழை இயல்பாக இருந்தாலும், பல இடங்களில் மழைப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது,’’ என்று கூறப்பட்டுள்ளது. 

‘’Hasdeo வனப்பகுதி சத்தீஸ்கரின் நுரையீரல் போன்றதாகும், இந்தியாவின் மிகப்பெரிய வனப்பகுதிகளில் இதுவும் ஒன்று. அங்கு பல்லுயிர்ச்சூழல் செறிவாக உள்ளதோடு, ஏராளமான வன உயிரினங்களும் உள்ளன. ஒரு வனப்பகுதியில் உள்ள மரங்களை அழிப்பதால், அது கிட்டத்தட்ட பாலைவனமாக மாறிவிடுகிறது, தவிர அது சார்ந்துள்ள ஏராளமான வன உயிரினங்கள் இருப்பிடத்தை இழந்து வாட நேரிடுகிறது. மேலும், காடுகளை அழித்து நிறுவப்படும் நிலக்கரி சுரங்கங்கள் படிப்படியாக, கார்பன் டை ஆக்ஸைடு வெளியீட்டை அதிகரித்து, உலக வெப்பமயமாதலை அதிகப்படுத்துவதில் பங்கு வகிக்கின்றன என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்,’’ என்று Licypriya Kangujam கூறுகிறார். இந்தியாவைச் சேர்ந்த இவர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.

அசைக்க முடியாத நிலையில் இன்றளவும் நிலக்கரி பயன்பாடு 

Guardian வெளியிட்ட சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றில், உலகம் முழுவதும் புதியதாக நிறுவப்படும் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் பலவும் 100க்கும் மேற்பட்ட நிலக்கரி நிறுவனங்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் இந்த செயல் மிகவும் ‘பொறுப்பில்லாத மற்றும் அலட்சியமான’ ஒன்று எனக் குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வில் ஒரு முக்கியமான விசயம் தெரியவந்தது. அது என்னவெனில், ‘கோல் இந்தியா நிறுவனம் வருகிற 2025 முதல், நிலக்கரி உற்பத்தியை ஆண்டுக்கு 100 கோடி டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது,’ என்பதுதான். 

தற்போதைய உற்பத்தி சூழல் அடிப்படையில் பார்த்தால், ஜூன் 2022 நிலவரப்படி, நிலக்கரி, எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவற்றில் இயங்கும் இந்தியாவின் ஒட்டுமொத்த மின்சார உற்பத்தியில், கோல் இந்தியாவின் பங்களிப்பு 73.4% ஆக உள்ளது. International Energy Agency இந்தியா குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை எட்ட வேண்டுமெனில், இந்தியா தற்போது நிலக்கரிக்கு தரும் முக்கியத்துவத்தை கைவிடுவது நல்லது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Hasdeo கதை என்ன?

‘சத்தீஸ்கரின் நுரையீரல்’ என அறியப்படும் இந்த பகுதி, சுமார் 1,70,000 ஹெக்டேர் பரப்பளவில் சூரஜ்பூர், சுர்குஜா, கோர்பா ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ளது. மத்திய இந்தியாவின் முக்கிய வனப்பகுதியாக திகழும் இங்கு, பல்வேறு உயிரினங்கள் நிறைந்திருக்கின்றன.

இவை தவிர இந்த மாவட்டங்களில், கோண்ட், ஓரான், லோஹர் போன்ற இனத்தைச் சேர்ந்த சுமார் 17.90 லட்சம் ஆதிவாசி மக்கள் வசிக்கின்றனர். வக்ள ஆவர். இந்த பிராந்ததியம் கிட்டத்தட்ட 18 நிலக்கரி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தொடர்ச்சியாக நிலக்கரி உற்பத்திக்காக, மரங்கள் வெட்டியெடுக்கப்படுவது நடைபெறுகிறது. இதற்கு, ஆதிவாசி மக்கள் மற்றும் உள்ளூர் அரசு நிர்வாக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

2011ல் Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Ltd மூலமாக Parsa East Kete Basan (PEKB) அதானி குழுமத்திற்கு கையளிக்கப்பட்டது. இதனை கைவிட வலியுறுத்தி, Indian Council of Forest Research and Education மற்றும் Wildlife Institute of India கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. எனினும், Hasdeo Arand பகுதியில் நிலக்கரி சுரங்க பணிகளை மேற்கொள்ள வன மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி தரப்பட்டுள்ளது.

2022 ஜூலையில் குறிப்பிட்ட பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் நிறுவும் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ தர்ம்ஜித் சிங் கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தில், ‘ஹஸ்தியோ பகுதியில் நிலக்கரி உற்பத்திக்காக தொடர்ந்து காடுகளை அழிப்பதால், அங்குள்ள யானைகள் வெளியேறி வருகின்றன. இது, மனிதன் – யானை மோதல் ஏற்படும் அபாயகர சூழலை ஏற்படுத்தியுள்ளது,’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
‘’இப்படி பல்வேறு எதிர்ப்புகள், பரிந்துரைகளையும் மீறி, பழங்குடிகளின் வாழ்வாதாரம், வன உயிரினங்கள், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை ஏதுமின்றி மத்திய அரசு இயந்திரம், ஹஸ்தியோ வனப்பகுதியில் தொடர்ந்து நிலக்கரி உற்பத்திக்கு அனுமதி அளிப்பது வேதனையாக உள்ளது. மத்திய அரசின் இந்த போக்கு சத்தீஸ்கர் மட்டுமின்றி எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, இதுதொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அக்டோபர் 14ம் தேதியன்று Save Hasdeo Conference ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்,’’ என்று சுக்லா தெரிவித்தார்.

Also, read this in English

Translated by: Parthiban S

Anuraag Baruah
Anuraag Baruah
Articles: 6

One comment

Comments are closed.