Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

மின்சார வாகனங்கள் பற்றி உலவும் பல்வேறு வதந்திகளும், உண்மையும்

Translated by: Parthiban S

English | Assamese | Malayalam

இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் டிரெண்டாக மாறியுள்ள Electric Vehicles (EV) எனப்படும் மின்சார வாகனங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்? அவை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் பல்வேறு தகவல்களில் எவை உண்மை, எவை பொய் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தகவலின் விவரம்:

(-) மின்சார வாகனங்கள் பொருளாதாரச் சுமை தரக்கூடியவை. எரிபொருளில் இயங்கும் என்ஜின்களை விட இவ்வகை என்ஜின்கள் விலை உயர்ந்தவை.

(-) மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்ய நீண்ட நேரம் தேவை.

(-) மின்சார வாகனங்களின் பேட்டரி ஆயுட்காலம் மிகக் குறைவு. சில ஆண்டுகளே தாங்கும்.

(-) பெட்ரோல் டீசல் வாகனங்களை விடவும் பேட்டரி வாகனங்கள் ஏற்படுத்தக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம்.   

(-) மின்சார பேட்டரி வாகனங்கள் அதிக மைலேஜ் தராது.

(-) இந்தியாவில் மின்சார வாகனங்களை ரீசார்ஜ் செய்யும் நிலையங்கள் போதிய அளவில் இல்லை.

(-) தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நிறுத்தினால், மின்சார வாகனங்கள் பாதிப்படையும்.

உண்மை அறிவோம்:

முதலில், மின்சார வாகனங்கள் அதிக பொருளாதார சுமை தரக்கூடியவையா என்று நாம் பார்த்தால், இல்லை என்பதே பதில். எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றை செய்ய ஒருவர் தயாராக இருந்தால், இந்த வாகனங்களை வாங்கி பயன்படுத்துவது எளிதுதான்.

பேட்டரியில் இயங்கக்கூடிய வாகனங்களுக்குப் பொருந்தக்கூடிய விலையில்தான் இவ்வகை வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தற்சமயம், இந்த விலை சற்று அதிகமாக இன்னும் ஓரிரு ஆண்டுகளில், பெட்ரோல் ரக கார்களுக்கு ஒத்த விலையில் கிடைக்கப் பெறும் என்று இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எப்போதுமே, ஒரு புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டால், அதில் வெளிவரும் தயாரிப்புகள் சற்று அதிக விலையுள்ளதாகவே இருக்கும். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல பெரும்பாலான மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கும்போது, படிப்படியாக விலை குறைந்து, இயல்பு நிலைக்கு வரும். அதே நிலைதான், இந்த மின்சார பேட்டரி வாகனங்களுக்கும் பொருந்தும். இது மட்டுமின்றி, இந்த வகை வாகனங்களுக்கு இந்திய அரசு தரப்பில் பல்வேறு மானிய உதவிகள், சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

சமீபத்தில் மின்சார பேட்டரி வாகனங்களுக்கு கூடுதல் மானியம் அளிக்கும் வகையில், அவற்றுக்கான பட்ஜெட்டை மத்திய அரசு சற்று அதிகப்படுத்தியுள்ளது. இதன்மூலமாக, மின்சார பேட்டரி வாகன விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில உதிரிபாகங்கள் தவிர மற்றபடி பார்த்தால், மின்சார பேட்டரி வாகனங்களை பராமரிப்பதற்கும், உபயோகிப்பதற்கும் குறைந்த செலவுதான் பிடிக்கும். என்ஜீன் தேய்மானச் செலவு அதிகம் இருந்தாலும், வாழ்நாள் முழுக்க ஆகும் பராமரிப்புச் செலவு குறைவு என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

அடுத்தப்படியாக, மின்சார பேட்டரி வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் பிடிக்குமா என்று நீங்கள் கேட்டால், இல்லை என்பதே பதில்.

நடைமுறையில், ஒவ்வொரு வாகனமும் சாலையில் ஓடுவதை விட தனது வாழ்நாளில் 90% நேரத்தை பார்க்கிங் பகுதியில்தான் கழிக்கிறது. அந்த நேரத்தில் மின்சார பேட்டரி வாகனங்களை எளிதாக சார்ஜ் செய்துகொள்ளலாம்.

சமீப நாட்களாக, இந்திய சந்தையில் மிக விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய சார்ஜர்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் உதவியுடன், 42 நிமிடங்களில், 10 முதல் 80 சதவீதம் வரை நாம் சார்ஜ் செய்ய முடியும். இந்த விரைவான சார்ஜர்கள் 4-சக்கர வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்ற பயன்படும் என்பதால், சற்று பெரிய வடிவில் இருக்கும். கியா நிறுவனம் சமீபத்தில் இத்தகைய அதி விரைவில் சார்ஜ் செய்யும் சார்ஜர்களை விற்கும் மையத்தை குர்கானில் தொடங்கியுள்ளது. 

Bureau of Energy Efficiency கூற்றின்படி, மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் (2-சக்கரம், 3-சக்கரம், 4-சக்கரம்) சாதாரண/நடுத்தர சார்ஜர்களை பயன்படுத்தும்போது, 0% முதல் 80% வரை சார்ஜ் ஏற, 1 முதல் 5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். அதுவே, விரைவான சார்ஜர்கள் எனில், 1 மணிநேரத்திற்கும் குறைவாகவே பிடிக்கும். விரைவான சார்ஜர்கள் பெரும்பாலும் 4-சக்கர வாகனங்களுக்கே பயன்படும். ஏனெனில், அவற்றில் பேட்டரி சற்று பெரியதாக இருக்கும்.

‘மின்சார வாகனங்களின் பேட்டரி ஆயுட்காலம், சில ஆண்டுகள் மட்டுமே இருக்கும்; நீண்ட காலம் வராது,’ என்று சிலர் சந்தேகம் எழுப்புகிறார்கள்.

உண்மையில், மின்சார வாகனங்களின் பேட்டரி நீண்ட காலம் தாங்கும். சில சமயம், அவற்றின் ஆயுட்காலம் சம்பந்தப்பட்ட வாகனங்களின் ஆயுட்காலத்தைவிடவும் அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான நிறுவனங்கள், தங்களது பேட்டரிகளுக்கு 5 முதல் 8 ஆண்டுகள் வாரன்ட்டி தருகின்றன. எனினும், சமீபத்திய தொழில்நுட்பத்தின்படி தயாரிக்கப்படும் பேட்டரிகள் 10 முதல் 20 ஆண்டுகள் தாங்கக்கூடியவையாக உள்ளன. எனவே, வாகனம் வாங்கிய சில ஆண்டுகளிலேயே பேட்டரியை மாற்ற நேரிடுமோ என நீங்கள் அச்சப்பட தேவையில்லை.

பெட்ரோல்/டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் தாக்கம் மிக அதிகம் என்று சொல்வதும் தவறாகும். பெட்ரோல்/டீசல் வாகனங்களை விடவும், மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும்போதும், இயக்கும்போதும் வெளியிடும் கார்பன் தடயம் குறைவுதான். அந்த வாகனங்கள் உற்பத்தி செய்யும் மின்சார ஆற்றலும் பாதிப்பு இல்லாததாகும்.

பெட்ரோல் வாகனங்கள் தனக்கான எரிபொருளில் தேங்கியுள்ள 17 முதல் 21% சக்தியை ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றன. அதேசமயம், மின்சார வாகனங்கள் அவற்றின் 59% முதல் 62% மின் சக்தியை ஆற்றலாக மாற்றிக் கொள்கின்றன.

2020ல் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், புதை படிம எரிபொருட்களை பயன்படுத்தி, மின்சார வாகனங்களுக்கு ஆற்றல் கொடுத்தாலும் கூட அவை வெளியிடக்கூடிய CO2 அளவு குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, மின்சார வாகனங்களை தயாரிக்கும்போது அவை பெட்ரோல்/டீசல் வாகனங்களை விட அதிகளவு கார்பன் தடயங்களை வெளியிட்டாலும், வாழ்நாள் முழுக்க பார்க்கும்போது அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம் மிகக் குறைவுதான்.

மின்சார வாகனங்கள் அதிக மைலேஜ் தராது என்று தகவல் பகிர்வது ஏற்புடையதல்ல. இந்திய வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கக்கூடிய மைலேஜ் இந்த வாகனங்களில் கிடைக்கிறது. Bureau of Energy Efficiency கூற்றின்படி, 2-சக்கர வாகனங்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால், 84 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்; அதுவே, 4-சக்கர வாகனங்கள் என்றால், ஒரு முறை சார்ஜ் செய்தால், 150 முதல் 200 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என தெரியவருகிறது.

நாடு முழுக்க படிப்படியாக அதிகரித்து வரும் சார்ஜிங் நிலையங்கள் காரணமாக, இனி மின்சார வாகனங்கள் பயன்படுத்துவது எளிதாகிவிடும். இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் EV சார்ஜிங் நிலையங்கள் 2.5 மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாகச் சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, பேட்டரிகளை மாற்றிக் கொள்ளும் நிலையங்களும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், நீண்ட தொலைவு நாம் பயணிப்பது எளிதாகிறது. இவ்வகை நிலையங்களில், காலியான பேட்டரிகளை நாம் கொடுத்துவிட்டு, அவற்றுக்குப் பதிலாக, சார்ஜ் நிரம்பிய பேட்டரிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் நிலையங்கள் போதிய அளவில் இல்லை என்று கூறப்படும் தகவலும் தவறாகும். இந்தியா முழுக்க 1750 மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜ் நிலையங்கள் உள்ளன. அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் இந்த நிலையங்கள் நிறுவுவதில் அதிக முனைப்பு காட்ட தொடங்கியுள்ளதால், இவற்றின் எண்ணிக்கை வருங்காலத்தில் மேலும் உயரக்கூடும்.

அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில், 48,000 புதிய மின்சார வாகன சார்ஜ் மையங்கள் தொடங்கப்படலாம், என தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி விவகாரங்களுக்கான அமைச்சகம் (MoHUA) மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்களை நிறுவும் வகையில், அதன் கட்டுமான விதிமுறைகளை மாற்றம் செய்துள்ளது. உதாரணமாக, நொய்டாவில் இனி புதிய குடியிருப்புகள் நிறுவப்பட்டால், அந்த குடியிருப்பில் ஒரு EV சார்ஜிங் நிலையம் நிறுவப்படுவது அவசியமாகும்.  

இதேபோல, தனிநபர் அவரது வீட்டில் வாகன நிறுத்துமிடத்தில் இத்தகைய சார்ஜிங் ஒன்றை நிறுவினால், அவர்களிடம் அனுமதி பெற்று, அவற்றை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வது நலம்.

நீர் தேங்கும் பகுதிகளில் மின்சார வாகனங்களை நிறுத்தினால், அவை சேதமடையும் என்று கூறுவதில் நம்பகத்தன்மை இல்லை. ஏனெனில், மின்சார வாகனங்கள் முழுவதும் நன்றாக மூடப்பட்டு, அவற்றின் உதிரிபாகங்கள் நன்கு பேக்கிங் செய்யப்பட்டே இருக்கும்.

மின்சார வாகனங்களுக்கு, IP (இன்கிரஸ் புரொடக்‌ஷன்) தருவது கட்டாயமாகும். பெரும்பாலான, மின்சார வாகனங்கள், IP67 அல்லது அதற்கும் மேலான தரத்தில்தான் தயாரிக்கப்படும். எனவே, இவற்றை எளிதாக நீர் மற்றும் தூசிகளை சமாளித்து, பாதுகாப்பாக இயக்க முடியும். IP67 தரக் குறியீட்டிற்கு மேலே தயாரிக்கப்படும் பொருட்கள் எதுவாக இருந்தாலும், அவை நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஈடானதாகும். ‘’IP67 தரக்குறியீடு உள்ள வாகனத்தை ஒருவர் விரும்பினால், 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் வரை நீரில் எந்த கசிவும் இன்றி மூழ்கி வைக்க முடியும்,’’ என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இறுதியாக, நீர் தேங்கியுள்ள இடத்தில் மின்சார வாகனங்களை இயக்கும்போது, நீரில் மின்சாரம் பாயும் என்றும், அல்லது வேறு விதமான அசம்பாவிதம் எதுவும் நிகழும் என்றும் அச்சப்படவே தேவையில்லை.

Translated by: Parthiban S

,
Anuraag Baruah
Anuraag Baruah
Articles: 6