Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் இடம்பெற்ற இயற்கை  அனர்த்தங்களும் அதன் பின்னணியில் காலநிலை மாற்றத்தின் பங்களிப்பும்

இலங்கையின் இருப்பிடமானது புவியியல், வணிக, பொருளாதார மற்றும் அழகியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே நேரத்தில், இலங்கையின் இருப்பிடம் பல்வேறு இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகும் இடங்களிலும் ஒன்றாகவும் இருக்கின்றது. உலகின் சிறிய தீவு நாடுகள் இயற்கை பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் பாதிக்கப்படக்கூடியவையாகும்.

வறட்சி, வெள்ளம், நிலச்சரிவு, சூறாவளி மற்றும் கரையோர அரிப்பு ஆகியவை இலங்கையை அடிக்கடி பாதிக்கும் இயற்கை அனர்த்தங்களாகும். காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் அதிகரிப்பு இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மனித ஆரோக்கியத்தை கணிசமாக அச்சுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளம், நிலச்சரிவு, கடுமையான காற்று மற்றும் வறட்சி போன்ற காலநிலைகள் இலங்கையில் 96 % பேரழிவுகளை ஏற்படுத்துகின்றன. 2018 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை இடர் சுட்டெண்ணின் (Global Climate Risk Index, 2018) படி, 2016 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கையின் வறட்சி

வறட்சி என்பது ஒரு பிரதேசத்தில் இயல்பை விட குறைவான மழைவீழ்ச்சியை அனுபவிக்கும் காலமாகும். போதிய மழைப்பொழிவு, அல்லது பனி இல்லாமை, மண்ணின் ஈரப்பதம் அல்லது நிலத்தடி நீர் குறைதல், நீரோடை ஓட்டம் குறைதல், பயிர் சேதம் மற்றும் பொதுவான நீர் பற்றாக்குறை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இலங்கையானது பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய வெப்பமண்டல தீவு என்பதால் வெப்பமான காலநிலை நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பருவகால விநியோகமானது முக்கியமாக ஆகஸ்ட் மாதத்தில் வறட்சி ஏற்படுவதைக் காட்டுகிறது.

குருநாகல், புத்தளம், அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள்  இலங்கையில் வறட்சியால அதிகம் பாதிக்கப்படுபவையாகும். இலங்கையில் 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். வறட்சி மிகவும் முக்கியமான காலநிலை அபாய நிகழ்வாகும். மேலும் பெரும்பாலும், மனித நடவடிக்கைகளை வறட்சி மோசமாக்குகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் நிலத்தடி நீரை வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்துகின்றனர்; அவர்களின் வாழ்வாதாரம் விவசாயத்தையே பெரிதும் நம்பியுள்ளது. இதனால் கிராமப்புற மக்கள் வறட்சியால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறாக இலங்கைக்கான வறட்சி கண்காணிப்பு முறையை உருவாக்குவது, வறட்சி நிலைமைகளுக்கு மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளின் பாதிப்பைக் குறைக்க உதவும். ஆனால் இது மிகவும் சவாலான பணியாக அமைகின்றது.

சமீபத்தில், 2017 இல் இலங்கையின் 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டனர். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயம், குடிநீர் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 2017 இல் இரண்டு விவசாய அறுவடைகளும் தோல்வியடைந்தது, 2020 ஆம் ஆண்டில், 8 மாகாணங்களில் 14 மாவட்டங்களில் 301,000 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

கால நிலை மாற்றமானது வறட்சியினை நீண்ட கால நிகழ்வாக மாற்றுவதுடன், வழமையான அனர்த்தமாகவும் மாற்றிகொண்டு வருகின்றது என விஞ்ஞானிகள்  கூறுகின்றனர். மேலும் 2050கள் மற்றும் அதற்குப் பிறகும் வறட்சி மிகவும் தீவிரமடையும் என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு என்பது இயற்கைப் அனர்த்ததின் மிகவும் பொதுவான வகையாகும், மேலும் நீரோட்டமானது, வறண்ட நிலத்தில் மூழ்கும் போது இது நிகழ்கிறது. பூமத்திய ரேகைப் பருவமழை காரணமாக இலங்கையின் காலநிலை வருடத்திற்கு இருமுறை குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டுகிறது. முதலில், இது மே முதல் செப்டெம்பர் வரை தென்மேற்கு பருவமழையையும், டிசம்பர் முதல் பிப்ரவரி வரை வடகிழக்கு பருவமழையையும் உண்டாக்குகின்றது. இதில், வடகிழக்கு பருவமழை இலங்கை முழுவதும் அதிக மழையை வழங்குகின்றது. தென்மேற்கு பருவமழை பொதுவாக மே மாத இறுதியில் இருந்து ஜூன் தொடக்கத்தில் இலங்கையில் உச்சத்தை அடைகிறது. களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கொழும்பு உட்பட நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பொதுவாக அதிக மழை பெய்யும். எனவே, தென்மேற்குப் பருவக்காற்று என்பது இலங்கையின் மேற்கு, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் ஏற்படும் வெள்ள நிகழ்வுகளின் ஏற்படுத்த கூடிய ஒன்றாகும். இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் பெருமளவில் நிகழும் வெள்ளப் பேரழிவுகளுக்கு வடகிழக்குப் பருவ மழையின் பிரதிபலிப்பாகும்.

இடப் பரவலைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம், களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் அம்பாறை மாவட்டங்களில் வெள்ளம் அடிக்கடி ஏற்படுகிறது. 2008 இல் அதிக எண்ணிக்கையில் மக்களின் பாதிப்பு நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. 2003 ஆம் ஆண்டைத் தவிர, ஏனைய வருடங்களில் வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது, இது கிட்டத்தட்ட 180 நபர்களை எட்டியது. வெள்ளபெருக்கின் காரணமாக இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான சேதங்கள் ஏற்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்த வரையில் நாடு முழுவதும் பல ஆறுகள் உள்ளன. இதனால், கனமழை பெய்தால் ஆறுகள் பெருக்கெடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, அந்த ஆறுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் விரைவில் வெள்ளப் பகுதிகளாக மாறிவிடும்.

 வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு நிறைய காரணிகள் பங்கு வகிக்கின்றது. முதலாவதாக, வானிலை நிகழ்வுகள் (கனமான அல்லது நீடித்த மழை, புயல் அலைகள், திடீர் பனி உருகுதல்) பங்களிப்பை கூற முடியும்.

அணைகள்,மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்ற  மனித கட்டுமாணங்கள் அதிகரித்த நகரமயமாக்கல், என்பவற்றை கூறமுடியும்.மேலும் பெரும்பாலும் வெள்ளப்பெருக்கு பிரதேசங்களில் அதிக வீடுகள் கட்டப்படுவதும் வெள்ளபெருக்குக்கு வழிவகுக்கிறது. நகரங்களில், பராமரிக்கப்படாத உள்கட்டமைப்பு நகர்ப்புற வெள்ளத்திற்கு வழிவகுக்கும். மேலும் காலநிலை மாற்றமும் பாரிய பங்கை வகிக்கின்றது.

காலநிலை மாற்றம் வளிமண்டலத்தை வெப்பமாக்குவதால், ஒவ்வொரு ஒரு டிகிரி செல்சியஸ் உயர்வுக்கும் காற்று 7% அதிக நீராவியை தன்னகத்தே தக்கவைத்து கொள்ளும். இந்த காற்று விரைவாக குளிர்ச்சியடையும் போது, ​​நீராவி நீர்த்துளிகளாக மாறி, ஒன்றாக சேர்ந்து அதிக மழையை உருவாக்குகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐபிசிசியின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையின்படி, காலநிலை பாதிப்புகள் முந்தைய மதிப்பீட்டு அளவுகளை விட இப்போது அதிகமாக உள்ளன. இது உலகின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கிறது. உலக மக்கள்தொகையில் சுமார் 40% பேர் (சுமார் 3.5 பில்லியன் மக்கள்) ” “high vulnerability” எனும் வகைக்குள் அடங்கும் வண்ணம் பாதிக்கபட கூடும் என கூறுகின்றது.

1990 க்குப் பிறகு உலக சராசரி வெப்பநிலையுடன் ஒப்பிடும்போது நிலம் 0.50C க்கும் அதிகமாக வெப்பமடைந்துள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிப்பது பசுமை இல்ல வாயு உமிழ்வுகள் மற்றும் பூமி அமைப்பில் ஏற்படும் எதிர்வினைகள் காரணமாகும். இந்த வெப்பமயமாதல் உலகளவில் வானிலை மற்றும் தீவிர நிகழ்வுகளில் மாற்றங்களை பாதித்துள்ளது என்பது தெளிவாகிறது.

நிலச்சரிவு

நிலச்சரிவானது பாரிய பாறைகள் நிலங்கள் பிற  காரணிகள் காரணமாக புவியீர்ப்பினால் கீழ் நோக்கி விழுதலாகும். நிலச்சரிவானது இலங்கையின் மலையக மாவட்டங்களில் பொதுவாக இடம்பெறும் ஒரு அனர்த்த நிகழ்வாகும். இலங்கையின் 65,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில், பத்து மாவட்டங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட 20,000 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு நிலச்சரிவுகளுக்கு ஆளாகிறது. அவை இலங்கையின் நிலப்பரப்பில் 30%  ஆகும். அந்த மாவட்டங்களாவன பதுளை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, களுத்துறை, மாத்தறை, காலி மற்றும் அம்பாந்தோட்டை என்பனவாகும்.

பல்வேறு சுற்றுச்சூழல் காரணிகளால் இதற்கு பங்கு வகிகின்றது. நீண்ட காலமாகத் தொடரும் தேவையற்ற மனித நடவடிக்கைகள் இறுதியாக நிலச்சரிவுக்கு தீவிர மழையால் தூண்டப்படுகின்றன. கனமழையானது நிலத்தடி அடுக்குகளுக்குள் நீர் ஊடுருவலை ஏற்படுத்துவதோடு, அதன் மூலம் நிலத்தின் இடைநிலை ஒத்திசைவை இழக்கிறது, இதனால் மண்ணின் எடையையும் அதிகரிக்கிறது. மற்றும்  மலைப்பகுதிகளில் ஏற்படும் வெள்ளம் மற்றும் நீர்த்தேக்கங்கள் என பல காரணிகள் நிலச்சரிவு நிகழ்வுகளை பாதிக்கலாம்.

இலங்கையில், 2002 வரை, ஆண்டு சராசரி நிலச்சரிவு பதிவுகள் அதிகபட்சமாக 50 ஆக இருந்தது. இருப்பினும், தரவுகள் 2003 – 2008 வரை திடீரென நிலச்சரிவுகளில் அதிகரித்ததைக் காட்டுகிறது. மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலச்சரிவுகளின் விவரங்கள் அதிகமாக உள்ளன, மேலும் மீண்டும்  நவம்பர் முதல்  ஜனவரி வரை நிலச்சரிவு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இலங்கையில் இரண்டு பருவமழைகாலங்களும் நிலச்சரிவு அனர்த்ததை ஏற்படுத்தும் வண்ணம் அமைகின்றன. மேலும் நவம்பரில் 275க்கும் மேற்பட்ட  நிலச்சரிவு சம்பவங்ககள் பதிவாகியுள்ளன. இதன்போது பதுளை, நுவரெலியா, கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக தாக்கத்தை காணமுடியும்.

17-05-2016 அன்று அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவில் பாரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. அடுத்த நாள் அதிகாலையில் மேலும் இரண்டு நிலச்சரிவுகள் தொடர்ந்தன. இது பல கிராமங்களின்  நில பகுதிகளையும் 150 க்கும் மேற்பட்ட மக்களையும் கொன்றது மற்றும் பல வீடுகள் இதன் காரணமாக அழிக்கபட்டது இந்த நிலச்சரிவின் முதன்மையான காரணியாக 2016 மே 14 முதல் 17 வரை நான்கு நாட்களுக்கு இடைவிடாத மழை அமைந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள மீரியபெத்தவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட மண்சரிவினால் கொஸ்லாந்தே தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிர் மற்றும் உடமைகள் இழக்கபட்டு நின்றனர்.இதன் விளைவாக, 16 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன, 192 பேர் காணவில்லை என்று நம்பப்படுகிறது, மேலும் சுமார் 150 வீடுகள்  நிலத்தினுள் புதையப்பட்டன.

புயல்

புயல் என்பது வானிலை அமைப்புக்கான பொதுவான சொல், இதில் காற்று குறைந்த வளிமண்டல அழுத்தம் உள்ள பகுதிகளை  நோக்கி சுழலும். புயல்களின் வகைகளில் வெப்பமண்டல புயல்கள், வெப்பமண்டல சூறாவளிகள் ஆகியவை அடங்கும். இலங்கை இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு. அரபிக்கடல், வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் சங்கமிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நாடாக உள்ளதால் அதிகளவு புயல்களுக்கு உள்ளாகும் நாடக அமைந்துள்ளது.

இலங்கையில் ஏப்ரல்-ஜூன் மற்றும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் காற்றின் நிகழ்வுகள் அதிகமாக இருக்கும். இரத்தினபுரி, பதுளை அனுராதபுரம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் காற்றின் நிகழ்வுகள் அதிகமாக காணப்படுகின்றன. மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலான தரவுகள் கிடைப்பதால் காற்றின் நிகழ்வுகள் குறைவாகவே காணப்படுகின்றன. மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரிவுகளுக்கு, DS பிரிவு மட்டத்தில் வரையறுக்கப்பட்ட தரவுகள் குறைவாக இருப்பதே குறைவான நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கலாம். உலகளாவிய சராசரி வெப்பமண்டல சூறாவளி காற்றின் வேகம் மற்றும் மழைப்பொழிவு என்பன எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கபடலாம் எனவும் மேலும் வெப்பமண்டல சூறாவளிகளின் உலகளாவிய சராசரி குறையும் அல்லது மாறாமல் இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகின்றது. மிகவும் தீவிரமான வெப்பமண்டல சூறாவளிகளின் எண்ணிக்கை சில கடல் பகுதிகளில் கணிசமாக அதிகரிக்கலாம். எனவே, தற்போது வெப்பமண்டல சூறாவளிகளால் பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு தற்போதைய ஆபத்து நிலை நீண்ட காலத்திற்கு அதிகரிக்கலாம் எனவும் ஆய்வறிக்கை கூறுகின்றது.

இலங்கையில் சூறாவளி நிகழ்வுகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், இதற்கு விதிவிலக்காக 1978 மற்றும் 2000 ஆம் வருடங்களில் ஏற்பட்ட சூறாவளி நிகழ்வுகளை கூறலாம். இந்த குறிப்பிட்ட வருடங்களில் ஏற்பட்ட சூறாவளியில் அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மக்களே காற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

சூறாவளி ஏற்பட பல்வேறு கால நிலை மாற்ற காரணிகள் பங்கு வகிக்கின்றன. அவையாவன.

  • கடல் மேற்பரப்பின் வெப்ப நிலை அதிகரிப்பு
  • கடம் மட்ட அதிகரிப்பு
  • வளிமண்டல மாற்றம்

கடல் அரிப்பு

இலங்கையானது 1600 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையையும், நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதற்காக நிலத்திற்கும் கடலுக்கும் இடையிலான எல்லையையும் கொண்ட ஒரு தீவாகும். இருப்பினும், இயற்கை மற்றும் மானுடவியல் நடவடிக்கைகள் காரணமாக கடலோர அரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுகள் நாட்டின் கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக, மோசமாக வடிவமைக்கப்பட்ட கடற்கரை கட்டமைப்புகள், கடற்கரைக்கு அருகில் ஹோட்டல்கள் மற்றும் பிற கட்டிடங்களின் கட்டுமானம் மற்றும் மணல் மற்றும் பவள சுரங்கம் என்பற்றை கூறலாம். அலைகள் மற்றும் நீரோட்டங்களின் சக்திகளால் ஏற்படும் கரையோரத்தின் நிலப்பரப்பு இடப்பெயர்ச்சி கடலோர அரிப்பு என்று அழைக்கப்படுகிறது.

நாட்டின் கடலோர சூழல் கவர்ச்சிகரமான , வளமான மற்றும் பல்லுயிர் ப்ரம்பல் என பல இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. எனவே, கடலோரப் பகுதியில் உள்ள நிலப்பரப்பு அதிக சுற்றுச்சூழல் மதிப்பு , அதிக பொருளாதார மற்றும் சமூக தேவைகளைக் கொண்டுள்ளது. மேலும் இலங்கயின் கடலோரப் பகுதி அடர்த்தியான மக்கள்தொகையை கொண்டது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமான தொகை மக்கள் கரையோற பகுதிகளில் வாழ்கின்றனர். கடலோரப் பகுதியில் உள்ள மொத்த மக்கள் தொகை 2010 இல் 8.4 மில்லியனாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

Uswetakeiyawa beach:  Erosion

                  

Oluvil coastal erosion

காலநிலை மாற்றம் , மனித செயல்பாடு, மாசுபாடு, ஆக்கிரமிப்பு இனங்கள் மற்றும் புயல்கள் என்பனவற்றால் ஏற்கனவே கடலோரப் பகுதிகள் அச்சுறுத்துலுக்கு உள்ளாகின்றது. கடல் மட்ட உயர்வு கடலோர சுற்றுச்சூழல் அமைப்புகளை அரித்து மூழ்கடித்து ஈரநிலங்களை அகற்றும் ஆபத்தை கொண்டுள்ளது. வெப்பமான மற்றும் அதிக அமிலத்தன்மை கொண்ட கடல்கள் கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது

புவி வெப்பமடைதல் பெருங்கடல்கள் விரிவடைவதால் கடல் மட்ட உயர்வு ஏற்படுகிறது, இது புயல் வடிவங்கள் மற்றும் அதிக அலை ஆற்றலை உருவாக்குகிறது. இதன் விளைவாக, வெள்ளம் மற்றும் அதிகரித்த அரிப்பு உலகின் பெரும்பாலான கடற்கரைகளை பாதிக்கின்றது. எனவே, இதன் விளைவாக ஏற்படும் அபாயங்களை நிர்வகிப்பதற்கு அடுத்த நூற்றாண்டில் இந்த ஆபத்துகளின் வளர்ச்சி பற்றிய சரியான கணிப்புகள் தேவை.

Gnana Prabu
Gnana Prabu
Articles: 10