Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

காலநிலைமாற்றம் கிழக்கிலங்கையில் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கின்றதா?

கால நிலை மாற்றம் எனும் பதத்தை நாம் கேக்கும்போதோ அல்லது பார்க்கும் போதோ நாம் உண்மையில் வானிலை மாற்றங்களையும் சூழல் மாசுறுதலை மட்டுமே கருத்தில் எடுத்து கொள்கின்றோம். அதன் பின் இருக்கும் அதிகளவான காலநிலை மாற்றத்திற்க்கு பின்னான பிரச்சினைகளை நாம் தெரிந்தோ தெரியாமலோ கடந்து செல்கின்றோம். அத்தகைய பிரச்சினை ஒன்று தான் டெங்கு பரவலும்.இலங்கையின் காலநிலையானது அயணமண்டல பருவபெயர்ச்சி காரணமாக வருடத்தில் இரண்டு தடவை முக்கியமான மாற்றத்தை காட்டுகின்றது. மே தொடக்கம் செப்டம்பெர் வரை தென்மேற்கு பருவகாற்றும் டிசம்பர் தொடக்கம் பெப்ரவரி வரைக்கும் வடமேற்கு பருவ பெயர்ச்சியையும் காட்டுகின்றது.  
இதில் வடமேற்கு பருவ பெயர்ச்சியே அதிகளவான மழை வீழ்ச்சியை இலங்கை முழுவதும் வழங்குவதுடன்  கால நிலை மாற்றத்திற்க்கும் காரணமாக அமைகின்றது.

கால நிலை மாற்றத்திற்க்கும் டெங்கு பரவலுக்கும் என்ன தொடர்பு?

உண்மையில் டெங்கு காவியான ஈடிஸ் நுளம்பு பரவலின் ஆரம்ப புள்ளியை மழை நீரே இட்டு வைக்கின்றது. மழைக்கு பின்னான காலகட்டமே இவற்றிக்கு சாதகமான சூழல் காலனிலையை உருவாக்குகின்றது. ஈடிஸ் நுளமபின் இனப்பெருக்கத்திற்கான வெப்ப நிலை 240C தொடக்கம்  390C ஆகும். முட்டையானது 220C தொடக்கம் 340C வரையான வெப்பநிலைகளில் பாதுகாப்பானதாக இருக்கும். இங்கு முட்டை பருவத்தை கழிப்பதற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் நீர் தேவைபடுகின்ற போதும். ஈடிஸ்  நுளம்பின் முற்றான வாழ்க்கை வட்டத்திற்கு குளிர் வெப்பநிலை என்பது அத்தியாவசியமற்றதாகும்.
இதன் காரணமாகவே டெங்கு பரவல் அதிகமாக அயணமண்டல காலநிலை நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகின்றது.

கிழக்கிலங்கையும் டெங்கு பரவலும்

இலங்கையின் கிழக்கு மாகாண மாவட்டங்களான திருகோணமலை , மட்டகளப்பு , அம்பாறை மாவட்டங்களில் டெங்கு தாக்கமும் கால நிலை மாற்றத்திற்க்குமான தொடர்பை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

கிழக்கு மாகணமானமானது இலங்கையின் உலர்வலய பிரதேசமாகும். வருடாந்த மழைவீழ்ச்சி1750mm – 2500mm ஆகும். வருடத்தின் இறுதி பகுதிகளில் அதாவது, வடமேற்கு பருவபெயர்ச்சி காரணமாக வருடாந்தம் அதிக மழைவீழ்ச்சியை பெறுகின்றது. நவம்பர் , டிசம்பர் மாதங்களில் கிடைக்கபெறும் இந்த மழை வீழ்ச்சியானது கிழக்கு மாகாணத்தில் டெங்கு பரவலில் பாரிய மாற்றத்தை காட்டுகின்றது.

வருடத்தின் ஏனைய மாதங்களை விட , டிசம்பர் , ஜனவரி , ஃபெப்ரவரி, மற்றும் மார்ச்  மாதங்களில் அதிகளவான டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை பதிவாகின்றது.

உதாரணமாக கடந்த வருடத்தை (2021) எடுத்து கொண்டோமானால், மட்டகளப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பதிவான மொத்தம் 3128 நோயாளர் பதிவுகளில் 2625 பதிவுகள் மேற்குறிப்பிட்ட மாதங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது. இது மொத்த பதிவுகளில் 84 சதவீதமாகும். அதே போல் திருகோணமலை மாவட்டதில் பதிவாகிய 258 நோயாளர் பதிவுகளில் 168 பேர் அதே மாதங்களில் பதிவாகியுள்ளன. இது 66 சதவீதமாகும். அம்பாறை மாவட்டத்திலும் அதே போன்றே பதிவாகிய 67 பதிவுகளில் 33 பதிவுகள் டிசம்பர் , ஜனவரி , ஃபெப்ரவரி , மார்ச் மாதங்களில் பதிவாகியவை தான். மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் 81 சதவீதமான டெங்கு நோயாளிகள் இந்த மாதங்களில் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது இங்கு புலனாகின்றது

2020ம் வருடமும் கிழக்கு மாகாணம் முழுவதும் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் 82 சதவீதம் ஆனோர்கள் இந்த குறிப்பிட்ட நான்கு மாதங்களில் பதிவானவர்களாக காணப்படுகின்றனர்.

அதே போல் 2019லும் கிழக்கு மாகாணம் முழ்வதும் 58 சதவீதமானோர் டிசம்பர் , ஜனவரி, ஃபெப்ரவரி, மார்ச் மாதங்களில் பதிவானோர்கள் தான். ஒவ்வொரு வருடமும் இவ்வாறான பரம்பலை தான் காட்டுகின்றது.

2017 ம் ஆண்டு இலங்கையில் அதிக டெங்கு நோயார்கள் அடையாளங்காணபட்ட ஆண்டாக மாறியது. கிழக்கில் இது எவ்வாறாக அமைந்தது ?

2017ம் ஆண்டானது இலங்கை முழுவதும் மொத்தமாக 186101 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

கீழுள்ள வரைபானது இலங்கை முழுவதும் ஒவ்வொரு மாதமும் பதிவு செய்யப்பட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை காட்டுகின்றது.

                                        

இந்த தகவலின் அடிப்படையில் இலங்கை முழுவதும் ஜுலை மாதத்தில் அதிகளவான நோயாளிகள் அடையாளங்காணப்பட்டதோடு அந்த எண்ணிக்கை 41121 அமைந்தது. 

அந்த ஆண்டில் பதியபட்ட மொத்த நோயாளர்களில் 56 சதவீதமானோர் மே – ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் பாதிக்கபட்டவர்களாக இருந்தனர்.

இதற்கு காரணமாக தென்மேற்கு பருவபெயர்ச்சி மழைவீழ்ச்சியிம் காரணமாக கூறப்பட்டு இருந்தது. கணிசமான அளவு மழை வீழ்ச்சியை பெற்று இருந்தாலும் கூட அதற்கு முன்னைய வருட மழை வீழ்ச்சியை விட குறைவான பரம்பலையே அது காட்டியது. மற்றும் சீரான கழிவு முகாமைத்துவமின்மை , சமூக பொருளாதார மட்ட பிரச்சினைகள் என்பனவும் கூறப்பட்டு இருந்தாலும் காலநிலை மாற்றமே முதன்மையாக கூறப்பட்டு இருந்தது.

அந்த குறிப்பிட்ட மாதங்களில் கிழக்கு மாகாண டெங்கு பரவலானாது ஆண்டின் மொத்த நோயாளர் எண்ணிக்கையின் 25 சதவீதமாக மட்டுமே காணபட்டதோடு , மே தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் கிடைக்கபெற்ற மழைவீழ்ச்சியானது மேற்கு , வடக்கு , மத்திய மாகாணங்களை விட குறைவான மழை வீழ்ச்சியே கிழக்கு மாகாணம் பெற்று இருந்தது குறிப்பிடத்கக்கது. http://www.statistics.gov.lk/abstract2019/CHAP1

திருகோணமலை , மட்டகளப்பு , அம்பாறை மாவட்டங்கள் வழமை போலவே 2017இலும் டிசம்பர் , ஜனவரி , ஃபெப்ரவரி , மார்ச் மாதங்களில் அதிகளவான தொற்றாளர் எண்ணிக்கையை காட்டியது. மொத்த தொகையின் 48 சத வீதத்தை அது கொண்டு இருந்தது. அத்தோடு வடமேற்கு பருவபெயர்ச்சியின் மழைவீழ்ச்சியே , தென்மேற்க்கு பருவபெயர்ச்சியை விட அதிகளவாக இருந்தது.

கடந்த 5 வருட கிழக்கிலங்கையின் டெங்கு பரம்பல்

கடந்த  5 வருடங்களின் தரவுகளின் அடிப்படையில் கிழக்கு இலங்கையின் டெங்கு பரம்பல் விகிதமானது குறைந்து செல்லும் விதமாகவே அமைந்துள்ளது.

முக்கியமாக இலங்கை முழுவதும் கொவிட் 19 தொற்று பின்னான காலத்தில் (2020 மார்ச் தொடக்கம் 2021 ஏப்ரல் வரையான காலத்தில்) கணிக்கபட்ட டெங்கு தொற்றாளர் எண்ணிக்கை 74% மாக குறைந்து இருந்த்து. பாடசாலைகள் , பொது இடங்கள் , அலுவகங்கள் , பொது போக்குவரத்துகள் முடங்கி இருந்தமை இதற்கான காரணங்களாக அமைந்ததுடன் , மக்களுக்கான விழிப்புணர்வுகளும் இந்த காலத்தில் அதிகரித்ததாக கூறப்பட்டு இருந்த்து.

எவ்வாறு இருப்பினும் 2020 டிசம்பர் , 2021 ஜனவரி , ஃபெப்ரவரி காலங்களில் மட்டகளப்பு மாவட்டத்தின் டெங்கு நோயாளர் எண்ணிக்கையானது ஏனைய மாவட்டங்களை விட அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடதக்க ஒன்றாகும்.

மேற்குறித்த வரைபின் மூலமும் நாம் மட்டகளப்பு மாவட்டத்தின் டெங்கு தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்ற ,இரண்டு மாவட்டங்களை விட அதிகம் என்பதை காணலாம். இதற்கு மட்டகளப்பு மாவட்டதின் சனத்தொகை அடர்த்தி வழி வகுக்கின்றது.

சனத்தொகை அடர்த்தி விபரங்கள்

மட்டகளப்பு –  206.7km²

அம்பாறை – 170.3 km²

திருகோணமலை – 161.7km²

https://www.citypopulation.de/en/srilanka/prov/admin/

கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து வரும் வீதத்தை இலங்கை முழுவதும் காட்டினாலும் , இலங்கையின் அமைவிடம் , காலநிலை மாற்றங்கள் , சமூக பொருளாதார நிலை டெங்கு பரவுகையை  ஊக்குவிக்க கூடிய காரணிகளாகும். இது பற்றிய விழிப்புணர்வுகளை மக்களும் அறிந்து செயற்படுதல் முக்கியமானதாகும்.

Gnana Prabu
Gnana Prabu
Articles: 10