Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

பசுமை பட்டாசுகள் (Green Firecrackers) வெடித்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு வராதா?

Green Firecrackers எனப்படும் பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது என்றும், தீபாவளிக்கு அதனை முயற்சிக்கலாம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி பார்க்கலாம். 

தகவலின் விவரம்:
பசுமை பட்டாசுகளை வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் வராது; மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அவை எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. 

ஃபேக்ட் என்ன?

யதார்த்த உண்மை என்னவெனில், சாதாரண பட்டாசுகளுடன் ஒப்பிடுகையில் ‘பசுமை பட்டாசுகள்’ குறைந்த அளவில் காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை குறைவாக வெளியிடும். ஆனால், அவை மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தாது என்று சொல்வது முற்றிலும் தவறாகும். 

‘பசுமை பட்டாசு’ ஆர்வலர்கள் கூறுவது என்ன?

அவர்கள் கூற்றின்படி, தீபாவளி பண்டிகையின்போது நாடு முழுவதும் வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு, ஒலி மாசு அதிகளவு ஏற்படுகிறது. இதனை கருத்தில்கொண்டு தயாரிக்கப்படுவதே இந்த ‘பசுமை பட்டாசுகள்’. இவை ‘சுற்றுச்சூழல் நண்பன்’ என்பதோடு மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் தரும் பாதிப்புகள் மிகக் குறைவு. 

நாம் கண்டறிந்தது என்ன?

‘Green Firecracker’ என்ற வார்த்தை இந்திய அளவில் தீபாவளி நெருங்க நெருங்க மிகவும் பிரபலம் பெற்றது. குறிப்பாக, டெல்லி போன்ற காற்று மாசு நிறைந்த வட இந்திய மாநிலங்களில் இந்த சொல்லாடல் அதிகளவில் கவனம் ஈர்ப்பதாக அமைந்தது. ஏற்கனவே ஆட்டோமொபைல் மற்றும் கனரக தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுக்களால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி போன்ற பிராந்தியங்களில் தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு பெரிதும் வாட்டி வதைக்கும் விசயமாக உள்ளது. இந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான காற்று மாசு காரணமாக, பட்டாசுகளில் இருந்து வெளியாகும் நச்சுப் பொருட்களை சமாளிப்பது சவாலாக உள்ளது. 

சாதாரண பட்டாசுகளை விடவும் மாசு குறைந்த, சத்தம் குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதுகாப்பான மாற்று என்று கூறிதான் ஆரம்ப காலத்தில் பசுமை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. காற்று மாசில் முறையே கந்தகத்தின் அளவு PM10 அதாவது 30–35% வரையும், நைட்ரஜன் ஆக்சஸடுகள் PM2.5 அதாவது 35-40% வரையும், ஒலி மாசு 120 டெசிபலுக்கு குறைவாகவும் பதிவு செய்யப்படுவதால், பசுமை பட்டாசுகள் சிறந்தவை என்றே கூறப்பட்டன. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் தீபாவளியை கொண்டாட இவற்றை பயன்படுத்தலாம் என மக்களிடையே பிரபலப்படுத்தப்பட்டன. உண்மையில், இந்த பசுமை பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையா, மற்றும் பாதுகாப்பானவையா? இந்திய பட்டாசு உற்பத்தித் துறையில் பசுமைச்சாயம் (greenwashing) பூசி மக்களை ஏமாற்ற மேற்கொள்ளும் ஒரு ஜூம்லா இதுவா? என்ற கேள்வியும் எழுகிறது.

(Are you wondering what ‘Greenwashing’ actually is? Do you want to know about Greenwashing in detail? Here is an explainer by CFC India.)

https://climatefactchecks.org/explained-what-is-greenwashing-and-how-is-it-related-to-climate-change/

மாசளவு கணிசமாக மட்டுமே குறைகிறது

இந்த பசுமை பட்டாசுகளுக்கான விதிமுறைகளை நிர்ணயித்த CSIR-NEERI என்ன சொல்கிறது என பார்த்தால், சாதாரண பட்டாசுகளை விட இவை PM 2.5 அளவுதான் மாசு வெளியிடுகின்றன. இது கிட்டத்தட்ட 30% குறைவாகும். நிபுணர்கள் கூற்றின்படி, ஒரு பாதுகாப்பான பசுமை தயாரிப்பு என்ற முத்திரையின் கீழ் கொண்டுவரும்போது, அதன் சாதக பாதக அம்சங்களை கவனத்தில்கொள்ள நாம் தவறிவிடுகிறோம். வழக்கமான பட்டாசுகள் ஏற்படுத்தும் மாசை விட 30-35% குறைவான மாசு ஏற்படுத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு தயாரிப்பை நாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த அல்லது பசுமை தயாரிப்பு என அர்த்தப்படுத்திவிட முடியாது. 

சாதாரண பட்டாசுகள் மட்டுமல்ல, இந்த பசுமை பட்டாசுகளும் ஏராளமான நச்சு வேதிப் பொருட்களை குறிப்பிட்ட அளவில் கலந்தே தயாரிக்கப்படுகின்றன. CSTEP-ல் காற்று மாசு பிரிவை நிர்வகிக்கும் பிரதிமா சிங் (Pratima Singh) என்ற ஆராய்ச்சியாளர் இதுபற்றி தி இந்து ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ‘’பசுமை பட்டாசுகள் எந்த தீர்வையும் அளிக்காது, அவை காற்று மாசை கணிசமான அளவு அதிகரிக்கவே உதவுகின்றன,’’ என்று தெரிவித்துள்ளார். 

‘’குறைந்த அளவு மாசுப் பொருட்கள் மற்றும் ரசாயன நச்சுப் பொருட்களை வெளியிடுகிறது என்பதற்காக பசுமை பட்டாசுகளை நாம் சாதாரண பட்டாசுகளுக்கு மாற்றாகவோ அல்லது பாதுகாப்பான தயாரிப்பாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது. மெக்னீசியம், பேரியம், கார்பன், ஆர்சனிக் போன்ற ரசாயனங்களுக்கு மாற்றாக பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் போன்ற பொருட்களை பயன்படுத்தியே இந்த பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இவையும் சுற்றுச்சூழலை கடுமையாகவே பாதிக்கச் செய்கின்றன என்றால் அது மிகையல்ல,’’ என்று இந்து ஊடகம் வெளியிட்ட மற்றொரு செய்தியில் த. மதுசூதனன் ஆனந்த், (Ambee – CTO and co-founder) குறிப்படுகிறார்.  

சாதாரண பட்டாசுகளை விட இவை அதிக தீங்கு விளைவிக்கக்கூடியவை


சாதாரண பட்டாசுகளை விட இந்த பசுமை பட்டாசுகள் அதிக தீங்கு தரக்கூடியதாகவே உள்ளன என்று தெரியவந்துள்ளது. Delhi Technological University (DTU) வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், பசுமை பட்டாசுகள் மிக நுண்ணிய மாசுப் பொருட்களை அதிகளவில் வெளியிடுகின்றன. அது கிட்டத்தட்ட PM2.5 மற்றும் PM10 அளவு காற்று மாசை ஏற்படுத்துகிறது. 2019 தீபாவளி பண்டிகையின்போது மேற்கொண்ட ஆய்வில், சாதாரண பட்டாசுகளை விடவும், மிக நுண்ணியமான மாசு பொருட்களை அதிகளவு பசுமை பட்டாசுகள் வெளியிடுவதாக, தெரியவந்துள்ளது. வழக்கமான பட்டாசுகளில் இருந்து காற்றில் கலக்கும் மாசுப் பொருட்களின் அளவு சற்று பெரியதாக இருந்தால், பசுமை பட்டாசுகள் வெளியிடும் மாசு பொருட்களின் அளவு சற்று சிறியதாக உள்ளது. அவ்வளவுதான் வித்தியாசம். 

DTU சார்பாக, சைலேந்தர் குமார் யாதவ், ராஜீவ் குமார் மிஸ்ரா மற்றும் IIT-Roorkee சார்பாக, போலா ராம் குர்ஜார் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்திய ஆய்வின் முடிவு  Elsevier பத்திரிகையில் வெளியிட்டுள்ளன. அதில், காற்றில் கலக்கும் இந்த மிக நுண்ணிய மாசுப் பொருட்கள், மிக எளிதாக, நமது சுவாசத்தில் கலந்து, நுரையீரல் மற்றும் ரத்தத்தில் கலந்து மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலி மாசு சற்றும் குறையவில்லை

Noise Pollution (Regulation and Control) Rules, 2000, கூற்றின்படி, குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரம் வெளியிட வேண்டிய பாதுகாப்பான ஒலி மாசு அளவு 45 டெசிபல் ஆகும். சாதாரண 160 டெசிபல் அளவுக்கு ஒலி மாசு வெளியிட்டால், இந்த பசுமை பட்டாசுகள் 110-125 டெசிபல் அளவுக்கு ஒலி மாசு வெளியிடுகின்றன. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட இருமடங்கு ஒலி மாசு என்பதும், சற்று கூட ஒலி மாசு குறையவே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. Centers for Disease Control and Prevention (CDC) சொல்வதைப் பார்த்தால், 70 டெசிபலுக்கு அதிகமான ஒலியை தொடர்ந்து கேட்க நேரிட்டால், கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. அதேபோல, 120 டெசிபலுக்கு மேலே கேட்க நேரிட்டால், காதுகளுக்கு உடனடியாக பாதிப்பு ஏற்படுகிறது. 

போலிகள் 

பல இடங்களில் சாதாரண பட்டாசுகளையே பெயர் மாற்றி ‘பசுமை பட்டாசுகள்’ என்று கூறி விற்பனை செய்வதாக, தெரியவந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் பசுமை பட்டாசுகள் தயாரிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான பயிற்சி முறை எதுவும் இல்லை. எனவே, இதுதொடர்பாக மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை. மும்பையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் (NGO) Awaaz Foundation, இந்த விசயத்தில் உடனடியாக National Environmental Engineering Research Institute (NEERI) தலையிட்டு, நாடு முழுவதும் விற்கப்படும் பசுமை பட்டாசுகளை உரிய கண்காணிப்பு செய்ய வலியுறுத்தியுள்ளது. Hindustan Times வெளியிட்ட ஒரு செய்தியில் லக்னோ நகரில் சாதாரண பட்டாசுகளையே பெயர் மாற்றி பசுமை பட்டாசுகள் என்று பலரும் விற்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறியுள்ள விசயங்களின்படி பார்க்கும்போது, பசுமை பட்டாசுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்றோ பசுமையானவை, பாதுகாப்பானவை என்றோ குறிப்பிடுவதன் மூலமாக, நாம் மனித குலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய தீங்கை ஏற்படுத்துகிறோம் என்று தெளிவாகிறது. சில சதவீத அடிப்படையில் காற்று மாசின் அளவு மாறுகிறதே தவிர, சாதாரண பட்டாசுகளுக்கும், பசுமை பட்டாசுகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. எனவே, இது முற்றிலும் ஒரு ‘greenwashing’ என்றால் அது மிகையல்ல. 

(with inputs from Aayushi Sharma)

Translated by: Parthiban S

Also, read this in English

Anuraag Baruah
Anuraag Baruah
Articles: 6