Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

இந்தியாவில் லித்தியம் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையும், கவலைகளும்! 

ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரிய அளவுக்கு லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மத்திய சுங்கத் துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அங்குள்ள Reasi மாவட்டத்தில் உள்ள Salal-Haimana பகுதியில் 59 லட்சம் டன் லித்தியம் நிறைந்துள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. 

எனினும், இந்த மதிப்பீடு தோராயமான ஒன்றுதான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வெட்டவெளிகள், அகழிகள், குழிகள் உள்ளிட்ட பல இடங்கள் மற்றும் துளையிடுதல் போன்ற பணிகள் மூலம் சேகரிக்கப்பட்ட லித்தியம் வளத்தை வைத்து, அதன் தரம், அளவு, உள்ளடக்கம் போன்றவற்றின் மிகக் குறைவான ‘’மதிப்பீடுதான்’’ இது.

கடந்த 2023 பிப்ரவரி 9 அன்று நடைபெற்ற Central Geological Programming Board (CGPB)-ன் 62வது மாநாட்டில், இந்திய புவியியல் ஆய்வு நிறுவன அறிக்கை மற்றும் 15 இதர புவியியல் ஆய்வறிக்கைகள், மேலும் 35 புவியியல் ஆய்வு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இவை அனைத்திலும், இந்தியாவில் எங்கெங்கு என்னென்ன தாது வளம் உள்ளன என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் 51 இடங்களில் தாது வளம் நிறைந்துள்ளதாக, தெரியவந்துள்ளது. இதில் 5 இடங்கள், தங்கம், பொட்டாசியம், மாலிப்டினம், அடிப்படை உலோகங்கள் கொண்டுள்ளன. இந்த இடங்கள், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, சத்திஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவற்றில் அமைந்துள்ளன. 

லித்தியம் மற்றும் அதன் பயன்கள் என்ன?

லித்தியம் என்பது வெள்ளி போல- வெண்ணிற இலகுவான ஒன்றாகும். இது பேட்டரி தயாரிக்கப் பயன்படும் முதன்மைப் பொருள். நாம் பயன்படுத்தும் ஃபோன்கள், லேப்டாப்கள், பேஸ்மேக்கர்கள், சூரிய மின்சக்தி உபகரணங்கள், மின்னணு வாகனங்கள் என அனைத்திற்கும் பேட்டரி முக்கியம். லித்தியம் அரிதான பொருள் என்பது மட்டுமல்ல, அதற்கு நிலைத்தன்மை கிடையாது. எனவே, அது காற்றில் எது இருந்தாலும் அதனுடன் வினைபுரிந்து, உடனடியாக வேறுபொருளாக மாறிவிடும். இதனால், சுத்தமான லித்தியம் எளிதில் கிடைக்காது. லித்தியம் பொறுத்தவரை, அதன் இயல்பு வடிவில் இருக்க வேண்டுமெனில், நாம் அதனை ஏதேனும் எண்ணெயில் கலந்து வைக்க வேண்டும், பாதுகாப்பாகத்தான் கையாள வேண்டும்.  

ஏன் இது இந்தியாவிற்கு மிக முக்கியம்?

தற்சமயம் ஆஸ்திரேலியா மற்றும் அர்ஜெண்டினாவில் இருந்து இந்தியா லித்திய இறக்குமதி செய்கிறது. வாகன தொழில்துறையின் எதிர்காலமே எலெக்ட்ரிக் வாகனங்கள் என்ற அளவுக்கு எல்லாமே மாறி வருவதால், சற்று தாமதமாக சுதாரித்துக் கொண்டுள்ள இந்தியா, லித்திய உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது. கடந்த 2017 – 19 வரையான நிதியாண்டு காலத்தில், இந்தயாவிற்குள் 165 கோடி லித்தியம் பேட்டரிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட $3.3 பில்லியன் ஆகும். 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் EV (Electric Vehicles) பயன்பாடு 30 சதவீதமாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாமே சொந்தமாக லித்தியம் உற்பத்தி மேற்கொள்ளும்போது, இறக்குமதிக்காகச் செலவிடப்படும் தொகை குறைந்து, பொருளாதார அளவில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும். 


எலெக்ட்ரிக் வாகனங்களுக்குத் தேவையான பேட்டரி தயாரிக்க முதன்மைப் பொருளாகப் பயன்படுவது லித்தியம். அதுவே சொந்த நாட்டில் கிடைக்கும்பட்சத்தில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, மின்னாற்றலை பயன்படுத்த நேரிடும். இதன்மூலமாக, பெட்ரோல், டீசல் தேவையும், அவற்றுக்கான செலவினங்களும் நமக்கு வெகுவாகக் குறையும். 

அதேசமயம், லித்திய பயன்பாட்டில் சில கவலை தரும் அம்சங்களும் உள்ளன. குறிப்பாக, தோண்டியெடுத்த பின், செய்ய வேண்டியது என்னென்ன என்று பார்க்கலாம். 

லித்தியம் தோண்டியெடுப்பதில் உள்ள ஆபத்துகள்: 

சுரங்கம் அமைத்துக் கடுமையான பாறைகளை உடைத்தே லித்தியம் தாது பிரித்தெடுக்கப்படுகிறது. ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் புவியியல் ரீதியாக பலவீனமாக உள்ள ஒரு இடத்தில் நடைபெறும் இத்தகைய சுரங்கப் பணிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றால் அது மிகையல்ல. குறிப்பாக, இந்தியாவில் லித்தியம் உள்ளதாகக் கூறப்படும் Salal-Haimana பகுதி நிலநடுக்க ஆபத்து மிகுந்ததாகும். Seismic zone IV என இந்த பகுதியை ஏற்கனவே வரையறுத்துள்ளனர். காரணம், இங்கே அதிக சேதாரங்கள் ஏற்படக்கூடும். கடந்த 2022 ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இங்கே பல முறை மிதமான நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதுதவிர, இந்த பகுதியில் 8 மேக்னிடியூட் என்ற அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் முன்கூட்டியே கணித்துள்ளனர். ஏனெனில், இது இமயமலையில் அமைந்துள்ளது. இமயமலை ஆண்டுதோறும் 5 மிமீ அளவுக்கு வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதற்கு, கண்டத் தட்டுகளின் நகர்வு மிக முக்கிய காரணமாகும். 

இப்படி தொடர்ச்சியாகக் கண்டத்தட்டுகள் இந்த பகுதியில் நகர்வதால், இங்குள்ள நிலப்பகுதி நிலையற்றதாகவும், திடமற்றதாகவும் காணப்படுகிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் இடையே உள்ள இமயமலைப் பகுதி சுற்றுச்சூழல் ஆபத்து நிறைந்த பகுதி என்பதால், இங்கே சுரங்கப் பணிகள் மேற்கொள்ளும்போது, பல்லுயிர்ச் சூழல் மண்டலம் பெரிதும் பாதிக்கப்படும். இமயமலையில் இருந்துதான் ஏராளமான ஜீவ நதிகள் உருவாகின்றன. அங்கே சுரங்கப் பணிகள் செய்யும்போது, ஒட்டுமொத்த நீராதாரமும் மாசுபட நேரிடுகிறது. 

லித்திய உற்பத்திக்காக சுரங்கம் தோண்டப்படுவதால், ஏராளமான நீர் வளம் மாசுபடுத்தப்படும்; நிலம் கையகப்படுத்தப்படும்; கார்பன் அதிகம் வெளியேற்றப்படும். இது உணவுப் பாதுகாப்பை சீர்குலைக்கும். சிலி நாட்டில் ஒரு டன் லித்தியம் தோண்டியெடுப்பதற்காக, 500,000 gallons நீர் வீணடிக்கப்படுகிறது. ஏற்கனவே, சுத்தமான நீர் இன்றி பரிதவிக்கும் இடங்களில் இத்தகைய சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அங்குள்ள நீராதாரமும் மாசுபடுவதைத் தவிர்க்க முடியாது. 

இதற்கு அடுத்தப்படியாக, Salal-Haimana பகுதியில் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது வழக்கம். இங்குள்ள காடுகளில், சிறுத்தைகள், இமயமலைக் கரடிகள், நரிகள், செம்மறியாடுகள், காட்டெருமைகள் என பலவும் வாழ்கின்றன. இதுதவிர, சுரங்கப் பணி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் எந்த விதிமுறைகளையும் பின்பற்றுவதல்ல. அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் இதற்கு தகுந்த சட்ட விதிமுறைகள் கிடையாது. எனவே, ஜம்மு காஷ்மீர் லித்தியம் உற்பத்தியால் பெரிதும் முடங்க நேரிடும். 

இனி செய்ய வேண்யது என்ன

‘’2070ம் ஆண்டுக்குள் மரபு சார்ந்த எரிபொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பேட்டரி, காற்றாலை, சூரிய மின்சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிற்கு மாற, இந்தியா தேசிய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த சூழலில், ஜம்மு காஷ்மீரில் மிகப்பெரும் அளவுக்கு லித்தியம் புதைந்துள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று டாக்டர் பார்த்தா தாஸ் (in-house expert Climate Fact Checks), தெரிவிக்கிறார். 

‘’எனினும், முறையான திட்டமிடல் இன்றி லித்தியம் தோண்ட முயற்சிக்கும்போது, அதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரங்கள் முடங்க நேரிடுகிறது. இதுதவிர, ஏற்கனவே நிலநடுக்க அபாயம் மிகுந்த ஜம்மு காஷ்மீரில் இப்படியான சுரங்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஏராளம். சுற்றுச்சூழல், சமூக பொருளாதாரம், பருவமழைக் குறைவு, வன உயிரினங்களின் வாழ்வாதார சேதம் என இந்த பட்டியல் நீள்கிறது. இந்தியா போன்ற நாட்டைப் பொறுத்தவரை சுரங்கப் பணிகள் மேற்கொள்ளும்போது, அதனால் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் கணக்கில் கொண்டு, அதற்கேற்ப சுரங்கப் பணிகளை மேற்கொள்வது நலம். குறிப்பாக, விவசாயப் பணிகள் பாதிக்கப்படாத அளவுக்கு நாம் நடந்துகொண்டால் மிக நல்லது,’’ என்றும் அவர் குறிப்பிடுகிறார். 

Also, read this in English

Translated By: Parthiban S

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10