Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் உற்பத்தியாகும் ஜீவ நதிகளின் நீராதாரம் குறையும் அபாயம்… 

ஐ.நா., பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரஸ் இமயமலையில் உற்பத்தியாகும் இந்தியாவின் ஜீவநதிகள் சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா தொடர்பாக எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதன்படி, வரும் நாட்களில் இமயமலையில் நிரம்பியுள்ள பனிக்கட்டிகளின் அளவு படிப்படியாகக் குறைந்து, இந்த ஜீவநதிகளின் நீராதாரமும் சரிவடையும் என்று அவர் தெரிவித்துள்ளார். UN Decade for Action on Water and Sanitation (2018-2028) மாநாட்டில் பேசுகையில்தான் குட்டெரஸ் மேற்கண்ட வகையில் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா., தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை தஜிகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளும் இணைந்து நடத்தின. இம்மாநாட்டில், உலக நாடுகள் கூட்டாக இணைந்து மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், நடவடிக்கைகள் பற்றி மதிப்பீடு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் பனிப்பாறைகள் எவ்வாறு இயங்குகின்றன?

ஐ.நா., மதிப்பீட்டின்படி, UNESCO WORLD HERITAGE பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கால்வாசி பனிப்பாறைகள் பெரும் அபாயத்தில் உள்ளதாக, தெரியவந்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டு தொடங்கி, இந்த பனிப்பாறைகள் உருகும் அளவு வேகமெடுத்துள்ளது. CO2 வெளியாகும் அளவு பன்மடங்காக அதிகரித்துள்ளதால், உலக வெப்பநிலையும் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். எகிப்து நாட்டின் Sharm El Sheik நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கான 27வது மாநாட்டில் யுனெஸ்கோ வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில்தான் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆண்டுதோறும் 5.8 கோடி டன் மதிப்புள்ள பனிப்பாறைகள் (பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் நீரின் அளவு) உருகி கடலில் கலப்பதாகவும், இதனால், கடல் நீர் மட்டம் 5% என்ற அளவில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இருந்ததைப் போல, உலக வெப்பநிலை உயர்வு ஆண்டுக்கு 1.5% என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலை நாம் சமாளிக்க முடியும்.

மனித வாழ்க்கைக்கு பனிப்பாறைகள் ஏன் முக்கியம்?

பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வீட்டுத் தேவை, விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்குத் தேவையான நீரை பனிப்பாறைகளே வழங்குகின்றன. இன்னும் விளக்கமாகக் கூறுவது எனில், பனிப்பாறைகளில் இருந்து உருவாகும் நீர்தான் ஆறு வடிவம் பெற்று, பல நாடுகளை கடந்து, கடலில் கலக்கிறது. எனவே, ஆறுகள் உருவாக, பனிப்பாறைகள் அவசியம். ஆஸ்திரேலியா தவிர மற்ற அனைத்து கண்டங்களிலும் பனிப்பாறைகள் உள்ளன. இவை பெரும்பாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலானவை. பல்லுயிர்ச்சூழல் மண்டலத்திற்கும் இந்த பனிப்பாறைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. பாறைகள் போன்ற கடினத்தன்மை பெற்றபின், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கடுக்காக பனிப்பாறைகள் சேருகின்றன. இவ்வாறு சேர்ந்த பின், புவியீர்ப்பு விசை காரணமாக அவை ‘’நகர நேரிடுகிறது’’ அல்லது ‘’மிதக்க தொடங்குகின்றன’’.

‘’பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கும்போது, லட்சக்கணக்கான மக்கள் நீர்ப்பற்றாக்குறையை சந்திப்பார்கள். அதைத்தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும், இதுதவிர பனிப்பாறைகள் அதிகளவு உருகி, கடலில் கலப்பதால் கடல் நீர் மட்டம் உயர நேரிடும். இதனால், கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் உருவாகும்,’’ என்று IUCN Director General டாக்டர் Bruno Oberle கூறுகிறார். 

இமயமலையில் உருவாகும் ஆறுகளை உலக வெப்பமயமாதல் எவ்வாறு பாதிக்கிறது?

இந்தியாவில் உள்ள ஆன்மீக பக்தர்கள் பலரும் இமயமலையில் பனிப்பாறை ஒன்றில் இருந்து கங்கை உற்பத்தியாகும் கௌமுக் என்ற இடத்தை நேரில் சென்று பார்வையிடுவதை தங்களது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த இடத்தில் தற்போது பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளன. இதனால், கங்கையின் நீரோட்டம் விரைவிலேயே பாதியாகக் குறையக்கூடும். இது கங்கையை நம்பியுள்ள கோடிக்கணக்கான இந்தியர்களை நேரடியாகவே பாதிக்கும்.
 

2016ம் ஆண்டில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை சுமார் 93.3 கோடியாக இருந்தது (ஒட்டுமொத்த நகர்ப்புற மக்கள் தொகையில் இது 9.3 சதவீதம்). இதுவே 2050ம் ஆண்டில் 170 கோடி முதல் 240 கோடியாக இருக்கும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள ‘United Nations World Water Development Report 2023: partnerships and cooperation for water’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29, 2023 அன்று மக்களவையில் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் உருகும் அளவு மற்றும் பனிப்பாறைகள் மீண்டும் உற்பத்தியாகும் அளவு குறித்து Geological Survey of India கடந்த பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வு முடிவுகள் பட்டியிலிடப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 76 பனிப்பாறைகளை தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

அந்த அறிக்கையின்படி, ‘’இமயமலையில் நிரம்பியுள்ள பனிப்பாறைகளில் பெருமளவு உருகத் தொடங்கியுள்ளன. அதேசமயம், அவை மீண்டும் உற்பத்தியாகும் அளவு என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இது, கவலை அளிப்பதாக உள்ளது. காரணம், உருகும் அளவுக்கு ஏற்ப பனிப்பாறைகள் மீண்டும் உற்பத்தியாவதில்லை,’’ என்று சுட்க்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு பனிப்பாறைகள் உருகுவதால் இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் ஜீவ நதிகளுக்குக் கிடைக்க வேண்டிய நீரோட்டத்தின் அளவு குறையும் என்பது மட்டுமல்ல. இமயமலையை சுற்றிலும் உள்ள பனி ஏரிகள் திடீரென வெடித்து வெள்ளப்பெருக்கு (GLOF) எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம், பனிச்சரிவு, நிலச்சரிவு போன்றவை இந்த பகுதியில் அடிக்கடி நிகழக்கூடும். 

இமயமலை ஆறுகளை பாதிக்கக்கூடிய காரணிகள் எவை?

இமயமலை – இந்து குஷ் பிராந்தியத்தில் மட்டும் 10 முக்கியமான ஆறுகள் ஓடுகின்றன. இந்த பிராந்தியம், 3வது துருவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆறுகளின் நீரோட்டத்தை நம்பியே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் உள்ளன. இந்த ஆறுகள் ஓடும் பகுதிகள் தவிர்த்து, இதர இமயமலையை ஒட்டியுள்ள இந்திய நிலப்பரப்பு (IHR) வறண்டதாகவே உள்ளது. இங்கு தேவையான நீர்த்தேவையில் 64% பங்களிப்பை இங்குள்ள 30 லட்சத்திற்கும் மேற்பட்ட நீரூற்றுகள்தான் வழங்குகின்றன. இதன்மூலமாக, இமயமலையை ஒட்டியுள்ள 12 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 5 கோடி மக்கள் பலன் பெறுகிறார்கள். அதேபோல, கங்கைச் சமவெளியில் மட்டுமே 50 கோடிக்கும் மேலான இந்தியர்கள் வசிக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான நீராதாரம் கங்கையில் இருந்து நேரடியாகக் கிடைக்கிறது. இவ்வாறு நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியாவின் பெரும்பகுதிக்குத் தேவையான நீரை வழங்கும் இமயமலையின் பனிப்பாறைகள் தற்போது அபாயத்தில் உள்ளன என்பதே யதார்த்தம். அவை பற்றி கீழே பார்க்கலாம்.

  1. பருவநிலை மாற்றம் முதல் பிரச்னையாக உள்ளது. World Meteorological Organization சொல்வதன்படி பார்த்தால், உலக சராசரியை விட இமயமலை பிராந்தியத்தில் மட்டுமே வெப்பநிலை உயர்வு சராசரி 0.4°C ஆக உள்ளது. பாரீஸ் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள சாராம்சங்களை பின்பற்றினால் இந்த அபாயத்தில் இருந்து சற்று விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 
  2. நீரோட்டத்தின் அளவு இரண்டாவது பிரச்னையாக உள்ளது. இமயமலை பிராந்தியத்தில் பனிப்பாறைகள் மீண்டும் உற்பத்தியாவது கவலை அளிக்கும் அம்சமாக மாறியுள்ளது. கடந்த 2001ம் ஆண்டில் இருந்து இதுவரை நாசா எடுத்த புகைப்படங்களை வைத்து பார்க்கையில், கங்கோத்ரி பகுதியின் அகலம் படிப்படியாக சுருங்கத் தொடங்கியுள்ளது. 1975ம் ஆண்டில் இருந்ததை விடவும் தற்போது 850 மீட்டர் சுருங்கியுள்ளது என்று தெளிவாக தெரிகிறது. அடுத்தப்படியாக, இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் 2,190 பாறைகளை இஸ்ரோ தொடர்ந்து கண்காணித்ததில், அவற்றில் 75% மட்டுமே மீண்டும் மீண்டும் உற்பத்தியாவதாக, தெரியவந்துள்ளது. சராசரியாக, 3.75 கிமீ பரப்பளவில் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதுதவிர, IHR பகுதியில் அமைந்துள்ள நீரூற்றுகளில் பாதி வறண்டு வருவதாக, NITI Aayog ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்மோ பகுதியில் மட்டும் 150 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, 83% நீரூற்றுகள் வறண்டுவிட்டன. சிக்கிம் பகுதியில் கூட பாதிக்கும் மேலான நீரூற்றுகள் வறண்டுவிட்டதாக, தெரிவிக்கப்படுகிறது. 
  3. மூன்றாவது பிரச்னை மாசுபடுதல். நம் மக்கள் ஆறு என்பதை ஒரு திறந்தவெளி குப்பைத் தொட்டியாகவே கருதுகின்றனர். 600 கோடி லிட்டர் அளவுக்கு தினசரி கழிவுகள் கங்கை நதியில் கலப்பதாகவும், இதில் கால் பகுதி மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. யமுனை நதியின் ஒட்டுமொத்த நீளத்தில் டெல்லி வெறும் 2% மட்டுமே உள்ளது. ஆனால், அதில் 70% அளவுக்கு டெல்லி வெளியேற்றும் கழிவுகள் மாசுபடுத்துகின்றன. இது மிகவும் வேதனை அளிக்கும் தகவலாக உள்ளது. தரைப்பகுதியில் ஓடும் ஆறுகள்தான் இப்படி என்றால், இமயமலைச் சரிவில் அமைந்துள்ள உத்தரகாண்ட் போன்ற இடங்களிலும் ஆறு மிகவும் மாசுபட்டுள்ளது. குறிப்பாக, உத்தரகாண்டில் ஓடும் ஆறு மனித பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்று 2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்படுகிறது.  
  4. இறுதியாக, மனிதர்கள் மேற்கொள்ளும் கட்டுமானம் மற்றும் இடிபாடு பணிகள். பெரிய அணைகள், கால்வாய் தடுப்புகள் மற்றும் நீர்சக்தி மின் உற்பத்திப் பணிகள் போன்றவை நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு பாதிப்புகளை ஆறுகள் மீது ஏற்படுத்துகின்றன. 

Translated By: Parthiban S

References:

  1. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/major-himalayan-rivers-like-indus-ganges-and-brahmaputra-will-see-their-flows-reduced-as-glaciers-recede-un-chief/article66651551.ece/amp/
  2. https://unesdoc.unesco.org/ark:/48223/pf0000383551
  3. https://www.unep.org/events/conference/un-climate-change-conference-unfccc-cop-27
  4. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/a-third-of-world-heritage-glaciers-under-threat-warns-unesco-study/article66095939.ece
  5. https://www.unesco.org/reports/wwdr/2023/en
  6. https://www.unep.org/events/conference/un-climate-change-conference-unfccc-cop-27
  7. https://public.wmo.int/en
  8. https://www.nwda.gov.in/upload/uploadfiles/files/Save%20the.pdf
  9. https://link.springer.com/article/10.1007/s12403-015-0178-2
  10. Image source: https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/watch-what-is-happening-to-the-worlds-glaciers/article66123420.ece

Also, read this in English

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10