Physical Address

23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India

வட இந்தியாவில் குறைவான குளிர்; தென்னிந்தியாவில் கடுங்குளிர்- பருவநிலை மாற்றம் காரணமா?

நடப்பாண்டில், இந்திய அளவில் குளிர்காலம் ஒரு வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வழக்கத்திற்கு மாறாக, இந்த முறை வட இந்தியாவில் குளிரின் தாக்கம் குறைந்து, சற்று வெப்பமாக இருக்கும் என்றும், தென்னிந்தியாவில் குளிர் அதிகளவு தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, வட இந்தியாவில் குளிர்காலம்தான் என்றாலும், சீதோஷ்ண நிலை வெப்பமாகவே காணப்படும். அதேசமயம், தென்னிந்தியாவில் கடுங்குளிர் நிலவும்.

டிசம்பர் மாதத்திற்கான மழைப்பொழிவு இந்தியாவின் பெரும்பகுதிகளில் மிகவும் குறைவாகவே இருக்கும், என்று வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே மதிப்பிட்டுள்ளது. இந்த சூழலில், குளிரின் தாக்கமும் குறைந்து, தட்பவெப்பம் அதிகரித்தே காணப்படும் என்று கூறப்படுவதால், இந்த டிசம்பர் மாதம் வட இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு வறண்ட மாதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்தகைய ஒரு பருவநிலை மாற்றம் வட இந்தியாவுக்கு புதியதாக உள்ளது. ஆம். இது நாள் வரையிலும், வட இந்திய பகுதிகளில் குளிர்காலம் என்றால் உறையவைக்கும் அளவுக்கு பனி கொட்டும். தென்னிந்திய பகுதிகளில் குளிர் தாக்கினாலும், தட்பவெப்பநிலை மிதமான குளிருடன் வெப்பம் நிறைந்தே காணப்படும். ஆனால், இந்த முறை, இது தலைகீழாக இருக்கும். வட இந்திய பகுதிகளில் பகல் பொழுதின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகபட்சம் 2 டிகிரி செல்சியஸ்க்கும், குறைந்தபட்சம் 4 டிகிரி செல்சியஸ்க்கும் மட்டுமே ஏற்ற இறக்கத்தை சந்திக்கப் போகிறது. 

தீபகற்ப இந்தியா, மத்திய இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் வடமேற்கு இந்தியாவில் ஆங்காங்கே வழக்கத்தைவிட குறைவான வெப்பநிலையே பதிவாகும் என்றாலும், வட கிழக்கு மற்றும் வட மேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் (பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தானின் சில இடங்கள்) வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலையே பதிவாக வாய்ப்புள்ளது. 

இயல்புக்கு மாறான வெப்பம் நிறைந்த குளிர்காலம் என்பதால் பாதிக்கப்படும் பகுதிகள்

அதிகபட்சமாக பாதிக்கப்படப் போவது ஜம்மு காஷ்மீர் பகுதிகள்தான். இங்கு, வழக்கத்தை விட இரவுப் பொழுதுகள் நடப்பாண்டில் வெப்பமாக இருக்க 55-75 சதவீதம் வாய்ப்புள்ளது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இந்நிலையே ஏற்படப் போகிறது. அதேபோல, நடப்பு குளிர்காலத்தில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் மேற்குப் பகுதிகளில் இயல்புக்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் கடந்தாண்டுகளில் இருந்த குளிர்கால நாட்களைவிட தற்போது அதிக வெப்பம் பதிவாக 55-75 சதவீதம் வாய்ப்புள்ளது.

ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மலைப்பிரதேசங்களில் இயல்பை விட அதிகமான வெப்பநிலை இந்த குளிர்காலத்தில் பதிவாகும் என்பதால், அங்குள்ள பனிப்பாறைகள் உருக நேரிடும். ஏற்கனவே, 2022ம் ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய வசந்த மற்றும் கோடை கால மாதங்களில் இந்த பிராந்தியங்களில் இயல்புக்கு மாறான வெப்பநிலையே பதிவானது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், வழக்கத்திற்கு மாறாக, தென்னிந்திய மாநிலங்களில் இந்த குளிர்காலம் முழுக்க பகல் மற்றும் இரவுப் பொழுதுகளில் குளிர் வாட்டி வதைக்கப் போகிறது. மேலும், தென்னந்தியாவில் டிசம்பர் மாதத்திற்கான மழைப்பொழிவு இயல்பாகவே இருக்கும், என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது. 

எல் நினோ, லா நினா மற்றும் பருவநிலை மாற்றம் 

லா நினா என்பது பூமத்திய ரேகைக்கு அருகாமையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள மத்திய மற்றும் கிழக்குக் கடலோர நாடுகளில் தரைமட்டங்களையும் சில்லிடச் செய்யும் அளவுக்கு குளிர் ஏற்படுத்தக்கூயதாகும். இது வெப்ப மண்டல நாடுகளை பாதித்து, காற்றழுத்தம் மற்றும் மழைப்பொழிவு போன்றவற்றில் இருமடங்கு மாற்றத்தை ஏற்படுத்தும். உதாரணமாக, இது எப்போதும் வெப்பமாக உள்ள தென்னமெரிக்காவின் மேற்குக் கடற்கரையை அதிகளவு குளிர்விக்கிறது. தட்பவெப்பத்தில் இது எப்போதும் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

இதுபோலவே, எல் நினோ என்பது பூமத்திய ரேகைக்கு தெற்கே அமைந்துள்ள பிராந்தியங்களில் வெப்பநிலையை உயர்த்தும் ஒன்றாகும். அதிக மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் வறட்சி போன்றவற்றை இவை இரண்டும் அடிக்கடி ஏற்படுத்தும்.

உதாரணமாக, இந்தியாவைப் பொறுத்தவரை, எல் நினோ வறட்சி அல்லது மிகக்குறைவான பருவமழைப் பொழிவை ஏற்படுத்தும் அதேசமயம், லா நினா கடுமையான பருவமழை, வழக்கத்திற்கான மாறான மழைப்பொழிவு மற்றும் கடுங்குளிர் போன்றவற்றை ஏற்படுத்தும்.

டாக்டர். பார்த்தா தாஸ், Head of Water, Climate & Hazard Division, Aaranyak, இதுபற்றி பேசுகையில், ‘’தற்போது பதிவாகி வரும் லா நினா பற்றி இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அது என்னவெனில், தற்போதைய லா நினா பூமியின் சமீப கால பருவநிலை வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிக நீண்ட லா நினாக்களில் ஒன்றாகும். பொதுவாக, எல் நினோ மற்றும் லா நினா இரண்டின் தாக்கம் மற்றும் கால அளவு பருவநிலை மாற்றத்தை பொறுத்தே அமைகிறது. இதன்படி, 2022-23ம் ஆண்டின் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கப் போவதற்கு பருவநிலை மாற்றமே காரணம். எனவே, அடுத்த 3 மாதங்களுக்கு வட இந்தியாவில் இரவு, பகல் என இரண்டுமே வழக்கமான குளிர்காலத்தில் இருந்ததைவிட அதிகளவு வெப்பம் கொண்டதாகவே இருக்கும். வட கிழக்கிந்திய மாநிலங்களிலும் இந்நிலையே காணப்படும்,’’ என்றார். 

டாக்டர் தாஸ் மேலும் கூறும்போது, ‘’இன்னொரு புறம் பார்த்தால், கடந்த காலங்களில், தென்னிந்திய பகுதிகள் குளிர்காலத்தில் மிதமான குளிர் மற்றும் இதமான வெப்பநிலையுடன் காணப்படும். ஆனால், இந்த முறை மிகவும் உறைய வைக்கக்கூடிய அளவுக்கு பனி பெய்யும், என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இது குறிப்பிட்ட பிராந்தியத்தில் நிலவும் வெப்பநிலையை கணக்கீடு செய்வதில் ஒழுங்கற்ற நிலையை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது. எனினும், நீண்ட கால அடிப்படையில் பார்த்தால், இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் ஏற்பட முழுமுதற் காரணம், பருவநிலை மாற்றம்தான். ஆனால், இந்த பருவநிலை மாற்றம் பற்றி முழுதாகக் புரிந்துகொள்ளாமல், சிலர் ‘இது குறுகிய காலத்திற்கு மட்டுமே, மனித இனம் மற்றும் சுற்றுச்சூழல் மீது தாக்கம் ஏற்படுத்துவதாகக்  கருதுவது’ வேடிக்கையாக உள்ளது,’’ என்றார். 

பயிர் விளைச்சலில் தாக்கம்

நடப்பு ரபி பயிர் சாகுபடி பருவத்தில், வழக்கத்தை விட அதிகமான வெப்பநிலை நிலவுவதன் காரணமாக, கோதுமை உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுளளது. ஏனெனில், தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாறுதல்கள் அப்படியே கோதுமை பயிர்களின் வளர்சிதை மாற்றத்தில் எதிரொலிக்கும். மிதமான குளிர்காலம் என்பதே, ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு ஏற்றதாகும். ஆனால், ஒரு வெப்பம் அதிகரித்த குளிர்காலம் என்பது எதிர்மறையான விளைவையே ஏற்படுத்தும். இத்தகைய சீதோஷ்ண காலத்தில், விவசாயிகள், பூச்சி தாக்கம், பூஞ்சைகள் தாக்கம் என ஏராளமான பாதிப்புகளில் இருந்து தங்களது பயிர்களை பாதுகாக்க போராட நேரிடும்.          


‘’ரபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்கள் அனைத்துமே, பருவமழைக்காலம் முடிந்த பின் பயிரிடப்படுபவை என்பதால், குளிர்காலத்திற்கு ஏற்ற வகையில்தான் இருக்கும். அவை பெரும்பாலும், வெப்பநிலை, மண்ணின் ஈரப்பதம், மழைப்பொழிவு போன்றவற்றால் உடனடியாக பாதிக்கப்படும் தன்மை கொண்டவை. எனவே, விவசாயிகள் பயிரிடுதல், விளைச்சலை பராமரித்தல் உள்ளிட்ட அனைத்திற்கும் முன்னெச்சரிக்கை அடிப்படையில் தகுந்த தொழில்நுட்ப வசதிகளை கையாளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,’’ என்றும் டாக்டர் தாஸ் தெரிவித்தார். 


இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கூறுவது என்ன?


Dr. Mrutyunjay Mohapatra, Director General of the IMD, இதுபற்றி இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு கூறுகையில், ’’லா நினா என்பது வெப்பநிலையை தீர்மானிக்கும் விசயம் மட்டுமல்ல. ஏனெனில், நவம்பர் மாதத்திலேயே லா நினாவின் தாக்கம் இருந்தது. அதனால்தான், ஏராளமான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் பாதிப்புகள் இந்தியாவை ஒட்டி ஏற்பட்டன. புயல் வந்த பின் ஏற்படும் Madden–Julian oscillation (MJO) இந்தியாவில் காணப்பட்டது. நாங்கள் சர்வதேச தரத்துடன் இந்த மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றார்.

மேலும், வெப்பமான குளிர்காலம் ஏற்பட இரண்டு காரணம் உள்ளதாக, அவர் தெரிவிக்கிறார். இதன்படி, ‘’western disturbances வலுவிழந்து, அதேசமயம், easterly winds தாக்கம் தற்போது அதிகளவில் உள்ளது. இதனால், மழை உருவாகக்கூடிய அளவுக்கு போதுமான ஈரப்பதம் காற்று மண்டலத்தில் இல்லை. எனவே, இந்த குளிர் சீசனில் வட இந்திய பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படும். இதனை தவிர்க்க இயலாது. பெரும்பாலான இடங்களில் இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்தே இருக்கும்; தவிர்க்க இயலாது,’’ என்கிறார். 

Translated By: Parthiban S

Also, read this in English

Climate Fact Checks Team
Climate Fact Checks Team
Articles: 10