Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா., பருவநிலை மாநாடு, (COP27), கடந்த நவம்பர் 6ம் தேதி எகிப்து நாட்டில் உள்ள Sharm El-Sheikh-ல் தொடங்கியது. நவம்பர் 18, 2022 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில், 45,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் மற்றும் 120க்கும் மேலான நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசுப் பிரதிநிதிகள் பங்கேற்றன. இரண்டு வாரம் நடைபெற்ற இந்த மாநாட்டில், இந்திய தரப்பில், சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் தலைமையிலான குழு பங்கேற்றது. இந்த மாநாட்டில், இந்தியா மேற்கொண்ட பரிந்துரைகள் மற்றும் சமர்ப்பித்த அறிக்கைகள் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சுற்றுச்சூழலை பெரிதும் மாசுபடுத்தும் நபர்களுடன் கரம் கோர்க்கும் முயற்சிக்கு இந்தியா தடை
வளரும் நாடுகளின் உதவியுடன் “Mitigation Work Programme” என்ற பெயரில் பணக்கார நாடுகள் ஒன்று சேர்ந்து, கார்பன் டை ஆக்ஸைடு வெளியிடுவதில் முன்னிலை வகிக்கும் 20 நாடுகள் எனக் குறிப்பிட்டு அந்த நாடுகள் மீது எடுக்க முனைந்த நடவடிக்கையை இந்தியா தடுத்துள்ளது.
முன்னேறிய நாடுகள், தற்போது வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற 20 நாடுகளை கார்பன் டை ஆக்ஸைடு அதிகளவில் வெளியிடும் நாடுகளாக அடையாளப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. கடந்த காலங்களில் அந்த நாடுகள் தொழிற்புரட்சி என்ற பெயரில் இதை விட அதிகளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதை வசதியாக மறந்துவிட்டன.
இதனை மாநாட்டில் சுட்டிக்காட்டிய இந்தியா, ‘ஏற்கனவே வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு தற்போது வளர்ந்து வரும் நாடுகள் எந்தளவில் பொறுப்பேற்க முடியும்?,’ என்றும் கேள்வி எழுப்பியது. இதற்கு, வளரும் நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்தன. ஏற்கனவே, பாரீஸ் உடன்படிக்கையின்படி, ‘’இலக்குகளை மாற்றுவோம்’’ என்ற செயல்திட்டத்தை அனுமதிக்க முடியாது எனவும் இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2024க்குள் New Global Climate Finance Target-ஐ நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தல்
COP27-ல் வளர்ந்த நாடுகளை மிகவும் வலியுறுத்தி new global climate finance target–ஐ ஏற்றுக்கொள்ளச் செய்ததில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். தவிர, வளர்ந்த நாடுகளின் தேவை அதிகமாக உள்ளதால், அதற்கேற்ப 2024க்குள் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில், ஏழை நாடுகளுக்கு அவர்கள் ஆண்டுதோறும் வழங்கும் நிதி உதவி அளவை உயர்த்தி வழங்கும்படி, இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு முன்பாக, இந்த நிதி உதவியை 2020ம் ஆண்டுக்குள், ஆண்டுதோறும் $100 பில்லியனாக பெற்றுத்தர, இந்தியா இலக்கு நிர்ணயித்திருந்தது.
இந்த மாநாட்டின் இடையே, தனது கருத்துக்கேற்ப செயல்படக்கூடிய வளரும் நாடுகளின் உயர்மட்ட அமைச்சரவை கூட்டுப் பேச்சுவார்த்தை (NCQG) ஒன்றையும் இந்தியா நடத்தியுள்ளது. இதன்மூலமாக, ‘ஏழை நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை கையாள தேவையான நிதி உதவி மட்டுமின்றி, தொழில்நுட்ப, மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை வளர்ந்த நாடுகள் கட்டாயம் ஏற்படுத்தித் தர வேண்டும். அதன்பிறகே, சுற்றுச்சூழலில் கலக்கும் மாசுகளின் அளவை கட்டுப்படுத்துவதில் வளர்ந்த நாடுகள் நிர்ணயித்த இலக்கை எட்ட முடியும்,’ என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
நிலக்கரி மட்டுமின்றி இதர புதைபடிம எரிபொருட்கள் பயன்பாட்டை குறைத்திட இந்தியா வேண்டுகோள்
நிலக்கரி பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய முயற்சிகள் விரைவில் அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆனால், IPCC வெளியிட்ட அறிக்கை ஒன்றில், உலகின் வெப்பநிலையில், 1.5 அல்லது 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டுமெனில், நிலக்கரி மட்டுமின்றி இதர புதைவடிவ எரிபொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை மறக்காமல் இந்தியா சுட்டிக்காட்டியது.
மேலும், ‘அறிவியல் ரீதியாக, போதுமான ஆதரவு ஏதுமின்றி சில எரிசக்தி ஆதாரங்களை ‘’பசுமை‘’ என்ற பெயரில் பயன்படுத்தும்படி வளர்ந்த நாடுகள் அறிவுரை கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை,’ என்று இந்தியா தெரிவித்துள்ளது. அனைத்து புதைவடிவ எரிபொருட்களுமே ‘பசுமை இல்ல வாயுக்கள்’ வெளியேற்றத்திற்குக் காரணமாக உள்ள சூழலில், நிலக்கரியை மட்டுமே கட்டுப்படுத்துவது ஏற்புடையதல்ல; உலக நாடுகள் ஒவ்வொன்றின் தேவையையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான ஒரு பொதுவான பசுமையான எரிசக்தி பயன்பாட்டிற்கு நாம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், வளர்ந்த நாடுகள் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்ளும்படி இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இழப்பு மற்றும் சேதாரம் – வளர்ந்த நாடுகளே முக்கிய காரணம்
இந்தியா, சீனா ஆகிய நாடுகள் உலகை மாசுபடுத்தும் முதன்மை நாடுகள் என்றும் இதுவரை பூமியில் ஏற்பட்ட பருவநிலை பேரழிவுகளால் உலகம் முழுக்க நிகழ்ந்த சேதங்களுக்கு இவ்விரு நாடுகளுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆண்டிகுவா, பர்புடா ஆகிய நாடுகள் மாநாட்டில் வலியுறுத்தின. இதற்கு, இந்தியா, சீனா தரப்பில், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ‘வளர்ந்த நாடுகளே இதற்கான இழப்பீடு தர வேண்டும்; நாங்கள் அல்ல,’ என்றும் வலியுறுத்தப்பட்டது.
‘’சில அறிக்கைகளின்படி, ஏற்கனவே வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் மாசு, சேதங்கள் காரணமாக நிகழ்ந்த பருவநிலை மாற்றங்களால் இந்தியாவும் பாதிக்கப்பட்டு வருகிறது. உண்மை இப்படியிருக்கும் சூழலில், எவ்வாறு பருவநிலை மாற்ற சேதங்களுக்கு இந்தியா தன்னிச்சையாக பொறுப்பேற்க முடியும்? இதற்கு வளர்ந்த நாடுகளே பொறுப்பேற்று, உரிய இழப்பீடுகளை தர வேண்டும்,’’ என்று இந்தியா வலியுறுத்தியுள்ளதாக, தெரிகிறது.
பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இணைந்த இந்தியா
UN climate summit COP27-ன் ஒருபகுதியாக, நவம்பர் 8, 2022 அன்று தொடங்கப்பட்ட “Mangrove Alliance for Climate” (MAC)-ல் இந்தியாவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இதன்படி, உலகம் முழுவதும் மாங்குரோவ் சுற்றுச்சூழல் அமைப்பை பாதுகாக்கவும், மீட்டுருவாக்கம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தலைமையில், இந்தோனேஷியா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஸ்பெயின், இலங்கை ஆகிய நாடுகள் பார்ட்னர்களாக இணைந்து செயல்பட உள்ளன. பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உலகம் முழுக்க பரஸ்பர முறையில் எல்லைகள் கடந்து மாங்குரோவ் வளர்ச்சியை பாதுகாக்க இதன்மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே தொழில்நுட்பம் பயன்படக்கூடாது
COP 27-ல் இந்திய பிரிவில் “Technology Needs Assessment for Sustainable Life” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய சுற்றுச்சூழல் செயலாளர் லீனா நந்தன், ‘’பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே தொழில்நுட்ப வசதிகள் உரித்தானவை அல்ல; சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும், சிறு நிறுவனங்களும் அவற்றை பயன்படுத்த உரிமை உள்ளது. அதற்கேற்ற நிதி உதவிகளும் அனைவருக்கும் கிடைத்திட வேண்டும். எதிர்காலத்தில் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ, தொழில்நுட்பத்தை புரிந்துகொண்டு, கையாள தேவையான வசதிகள் அவர்களுக்குக் கிடைத்திட வேண்டும்,’’ என்றார்.
‘இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திற்கும் இன்றைய தேவையாக தொழில்நுட்பமே உள்ளது,’ என்று அவர் தெரிவித்தார். ‘ஒருசில நாடுகள்தான் பருவநிலை மாற்றத்திற்குக் காரணம் என்று அடையாளப்படுத்துவதன் மூலமாக, நாம் சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தப்ப முடியாது. ஏனெனில், பருவநிலை மாற்ற பாதிப்புகள் ஏற்கனவே நமது வாசலை தட்ட தொடங்கிவிட்டது. அதனை நாம் புரிந்துகொண்டு, மிகப்பெரிய அளவில் செயல்பாடுகளை மேற்கொள்வது நலம்,’ என்றார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி வசதி தேவை – இந்தியாவின் சாதுர்யம்!
The Energy and Resources Institute, TERI நடத்திய ‘Long Term Strategy on Adaptation and Adaptation Readiness in India’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்தாய்வில் சுற்றுச்சூழல் துறை செயலாளர் லீனா நந்தன் பேசுகையில், ‘’பருவநிலை மாற்றத்தை சமாளிக்க தேவையான திறன் ஏற்படுத்திக் கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இதற்கான முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களிடையே நம்பிக்கையை பெற்று, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஒரு உலகளாவிய முகாந்திரத்தை ஏற்படுத்த வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.
Translated by: Parthiban S
Also, read this in English