Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
Physical Address
23,24,25 & 26, 2nd Floor, Software Technology Park India, Opp: Garware Stadium,MIDC, Chikalthana, Aurangabad, Maharashtra – 431001 India
நடப்பு 2022ம் ஆண்டில் திடீரென இந்தியா முழுக்க இதுவரை இல்லாத அளவில் அனல் காற்று பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 2022 மார்ச் தொடக்கத்திலேயே ‘வெப்ப சீசன்’ தொடங்கியால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசி, மக்களை வாட்டி வதைத்தது. இதனால், சீரற்ற மழை, வெள்ளப்பெருக்கு உருவாகவே, நாடு முழுவதும் பருவநிலை மாற்றம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது. யதார்த்த நிலையில், பருவநிலை மாற்றம் என்பது குறிப்பிடத்தக்க அளவு பொது மக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது என்றால் அது மிகையல்ல.
உண்மை அறிவோம்:
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் மிக வெப்பம் நிறைந்த மாதமாக அறியப்படுகிறது. 2022 மார்ச் முதல் மே வரையான காலத்தில் இந்திய அளவில் அனல் காற்று வீச்சு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்சமாக, 2022ல் மட்டும் 280 நாட்கள் அனல் காற்று வீசிய நாட்களாகக் குறிப்பிடப்படுகிறது. இதில், மார்ச் 11 முதல் மே 18ம் தேதி மிகவும் உச்சக்கட்ட காலமாகும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், குஜராத் மற்றும் ஹரியானா ஆகிய 5 மாநிலங்கள், நடப்பாண்டில் நிகழ்ந்த வெப்ப அலை வீச்சில், 54 சதவீதத்தை சந்தித்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசத்தில், 27 வெப்ப அலை வீச்சுகளும், ராஜஸ்தானில் 39 வெப்ப அலை வீச்சுகளும், மத்திய பிரதேசத்தில் 38 வெப்ப அலை வீச்சு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இமயமலை பிராந்தியத்தில் அமைந்துள்ள இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை பதிவாகியிருப்பதாக, தெரியவந்துள்ளது.
‘’கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதுமே வெப்ப அலை வீச்சு அதிகரித்துக் காணப்பட்டிருக்கிறது. இந்திய அளவில் மார்ச் 2022 மாதத்தில் மட்டும் அதிகபட்சமான வெப்பநிலை (33.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது. வடமேற்கு இந்தியாவில் இதுவே 30.7 டிகிரி செல்சியஸ் ஆகவும், மத்திய இந்தியாவில் 35.2 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இது கடந்த 1901 முதல் 2022 வரையான காலக்கட்டத்தில் பதிவான அதிகபட்ச அளவாகும்,’’ என்று புவியியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் 2022ம் ஆண்டில் இதுவரை வீசிய வெப்ப அலை காரணமாக, இதுவரை 90 பேர் பலியாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்களில் வீசிய அனல் காற்று காரணமாக, கோதுமை உள்ளிட்ட பயிர் விளைச்சல், பழங்கள், காய்கறிகள் உற்பத்தி மற்றும் கால்நடைகள் உயிரிழப்பு போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் நிகழ்ந்திருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுக்க முற்றிலும் எதிர்பாரா வகையில் நிகழ்ந்து வரும் இத்தகைய அனல் காற்று பாதிப்பிற்கு, காலநிலை மாற்றமே பின்னணி காரணம் என்று, சில அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. சமீபத்திய வெப்ப அலை வீச்சு பாதிப்புகளுக்குக் காரணம், மனித குலம் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான் என்று, விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மார்ச் – மே 2022 காலக்கட்டத்தில் இந்தியா முழுக்க பருவநிலை மாற்றம் காரணமாக, 30 மடங்கு அதிகமான அனல் காற்று வீசியுள்ளதாக, விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளனர். மேலும், வெப்ப அலைகள் ஏற்பட காரணமான பருவ நிலை மாற்றத்தின் ‘பண்புகள்’ பற்றியும் நிறைய ஆய்வுகளை அவர்கள் செய்துவருகின்றனர்.
பருவநிலை மாற்றம் அடுத்தடுத்து நிறைய சேதம் ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளை உருவாக்குகிறது என்றால் அது மிகையல்ல. இது உலகம் முழுக்க நடைபெறும் ஒரு செயல் என்று IPCC குறிப்பிடுகிறது. மனிதர்கள் ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் நம் பூமியை 1.2 செல்சியஸ் கூடுதலாகச் சூடுபடுத்தியுள்ளது. சராசரி வெப்பநிலை உயர்வு காரணமாக, கோடை காலத்தில் வரலாறு-காணாத வெப்பநிலை உயர்வு ஏற்பட்டு, மிகக் கடுமையான வெப்ப அலைகள் வீசுகின்றன.
2022ல் இந்தியாவில் ஏற்பட்ட ‘சமச்சீரற்ற’ பருவ மழை
நடப்பாண்டில் இந்தியா முழுக்க பெய்த சமச்சீரற்ற பருவமழை பெரிய அளவில் தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை. அதேசமயம், நாடு முழுக்க வழக்கத்தை விட மிக அதிகமான மழைப் பொழிவும், சில இடங்களில் கொடூரமான வறட்சியும் ஒருசேர மக்களை வாட்டி வதைத்துள்ளன. இத்தகைய சூழல் ஏற்பட, பருவநிலை மாற்றமே காரணம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குனர் மிருதுஞ்சய் மோஹாபட்ரா கூறுகையில், ‘’இந்த ஆண்டு பருவமழை பெரிய தாக்கம் ஒன்றையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பல இடங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவில் மிகக் கடுமையான மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட நேரம் சீராகப் பெய்யும் இயல்பான மழை என்றில்லாமல், சமீப காலமாக, மேகம் வெடித்துக் கொட்டுவதைப் போன்ற மழைப்பொழிவுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இதற்கு பருவநிலை மாற்றமே காரணம்,’’ என்கிறார்.
மேற்கிந்திய நிலவரம்
ராஜஸ்தான் மாநிலம், ஜூலை மாதத்தில் 270 மிமீ மழைப் பொழிவை சந்தித்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் ஜூலை மாதம் அங்கு பெய்யும் மழையளவில் இது மிக அதிகபட்சமாகும். ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில், 8 மாவட்டங்கள் வழக்கத்திற்கு மாறான மழைப்பொழிவையும், 17 மாவட்டங்கள் மிக அதிகமான மழைப்பொழிவையும் சந்தித்துள்ளன. சில அறிக்கைகளின்படி, நடப்பாண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த மழைப்பொழிவு (161.4 மிமீ) வழக்கத்தை விட 67% அதிகமாகும். இதே மாதத்தில், ராஜஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஸ்ரீ கங்காநகர் மாவட்டம் மட்டும் இயல்பைவிட 235% அதிகளவு மழைப் பொழிவை சந்தித்துள்ளது. கடந்த 43 ஆண்டுகளில் இல்லாத வகையில் இது அதிகபட்சம் என்றும், அம்மாவட்டத்தில் வெள்ளச்சேதங்கள் கூட ஏற்பட்டன என்றும் தெரியவருகிறது.
அண்டை மாநிலமான குஜராத், ஜூலை 11ம் தேதியில் மட்டும் தனது ஒட்டுமொத்த சீசன் மழைப் பொழிவை பெற்றுவிட்டது என்றே சொல்லலாம். ஆம், அந்தளவுக்கு அன்றைய நாளின் 24 மணிநேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்துவிட்டது. இதனால், குஜராத் 19% சீசன் மழைப் பொழிவு பற்றாக்குறை என்பதை கடந்து, 106% கூடுதல் மழைப்பொழிவு பெற்ற மாநிலமாக மாறியுள்ளது. மழை காரணமாக, அங்கு 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 8 மாவட்டங்கள் முழுமையாக வெள்ள நீரில் மூழ்கின. ஆமதாபாத்தில் மட்டும் ஜூலை 10 காலையில் தொடங்கி ஜூலை 11 காலை வரையான 24 மணிநேரத்தில், இயல்பை விட (7.9 மிமீ) 563% கூடுதலான மழைப்பொழிவை (52.4 மிமீ) சந்தித்தது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், ஜூலை மாதத்தின் முதல் பாதியிலேயே 392.7 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது வழக்கத்தை விட இந்த மாதத்தில் பதிவாகும் மழைப்பொழிவில் 142% அதிகமாகும்.
கிழக்கு மற்றும் வடகிழக்கிந்திய நிலவரம்
வடகிழக்கு இந்தியாவில் அசாம் மாநிலம், மார்ச் 1 மற்றும் மே 27 வரையான காலத்தில், இயல்பை விட மாறாக, 754.3மிமீ அளவு மழையை பெற்றிருக்கிறது. இது இந்த காலக்கட்டத்தில் பதிவாகும் அளவை விட 48% கூடுதலாகும். மே மாதத்தில், அசாம் முழுக்க வழக்கத்தை விட 56% கூடுதல் மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தின் முதல் 12 நாட்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக, 528.5 மிமீ அளவு மழை அசாமில் பதிவாகியுள்ளது. இது 109% மிதமிஞ்சிய அளவாகும்.
ஜூன் மாதத்தின் 3வது வாரத்தில் மட்டுமே, அசாம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் முறையே 170, 203 மற்றும் 65% மிதமிஞ்சிய மழை பதிவாகியுள்ளது. மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் ஜூன் 17ம் தேதி மட்டும் 24 மணிநேரத்தில் 972 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 122 ஆண்டுகளில், மிக அதிகபட்சம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத கனமழை அசாம் மட்டுமின்றி அதன் அண்டை மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. சமீபத்தில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு, கனமழை போன்றவற்றால் மட்டும் அசாம் மாநிலத்தில் சுமார் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சில செய்திகளின்படி, இந்த வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்களும், ஆயிரக்கணக்கான கால்நடைகளும் பாதிக்கப்பட்டன.
மே மற்றும் ஜூனில் பெய்த வரலாறு காணாத மழை பெய்திருந்தாலும், கிழக்கு மற்றும் வடகிழக்கிந்திய பகுதிகளில் படிப்படியாக ஜூலை மாதம் மழை அளவு குறைந்து, வெப்பநிலை அதிகரித்திருந்தது. இப்படி தொடர்ச்சியாக ஜூலை மாதத்தில் வெப்பம் அதிகரித்து, 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக வெப்பநிலை பதிவாகும் அளவுக்கு மாற்றம் நிகழ்ந்தது. அந்த பிராந்தியத்தில் சராசரி வெப்பநிலை 2.30 டிகிரி அதிகரித்து 33.75 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்திருந்தது. அதேபோல, ஜூலை மாதத்தில், 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகக் குறைவான மழையே அங்கு பதிவானது. வழக்கத்தை விட 44.7% இது குறைவாகும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கிழக்கு மற்றும் வடகிழக்கிந்திய பகுதிகளில் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டு, வறட்சி ஏற்படும் அளவுக்குக் கூட நேரிடலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜூன் 1 முதல் ஜூலை 31 வரையான காலத்தில், 508.2 மிமீ மழை பெய்யும் என மதிப்பிடப்பட்ட நிலையில், 258.7 மிமீ அளவு மட்டுமே மழை பதிவாகியுள்ளது. இது ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறையை 49% அதிகரித்துள்ளது. விரைவிலேயே அங்கு வறட்சி ஏற்படும் சூழல் உள்ளது. 2014ம் ஆண்டில் இருந்து இதுவரை இப்படியான வறட்சி அங்கு ஏற்பட்டதில்லை, என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தென்னிந்தியா நிலவரம்
தென்னிந்திய மாநிலங்களில், முதலில் தெலுங்கானாவில் ஜூன் 1 முதல், ஜூலை 22 வரை 111% கூடுதலான மழை பெய்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்திலும், இதே காலத்தில் அதிகளவு மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக, Down To Earth வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
தெலுங்கானா முழுவதுமே இயல்பை விட அதிகளவு மழை பெய்துள்ளதால், பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள், சாலைகள் உள்பட எங்கும் வெள்ளக்காடாக மாறியது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 1 வரையான காலத்தில் இயல்பான அளவை விட (43 செமீ) 80.1 செமீ அளவு மழை பதிவாகியுள்ளது.
மறுபுறம், கேரளாவில் ஜூலை 22 நிலவரப்படி, 19% மழைப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதுவே ஜூன் மாதத்தில் 48% பற்றாக்குறையாக இருந்தது.
நிபுணர்களின் கருத்தை உள்ளடக்கிய செய்தியறிக்கை ஒன்றை Down To Earth வெளியிட்டுள்ளது. அதில், ‘’இந்தியா முழுக்க ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றத்திற்கு, இந்திய பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்துள்ளதே, காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, கடலில் வெப்பநிலை உயரும்போது, அதற்கேற்ப நிலத்தில் வெப்பநிலை மாறுவதால், பருவ மழைப் பொழிவில் தாக்கம் ஏற்படுகிறது,’’ என்று குறிப்பிட்டுள்ளது.
வட இந்தியா
இமாச்சல பிரதேசத்தில் 30க்கும் அதிகமான திடீர் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஒரே மாதத்தில் அங்கு 7 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு, பெரும் இயற்கை சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 133 பேர் உயிரிழந்துள்ளனர் என்று Down To Earth தெரிவிக்கிறது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிடி எனப்படும் குளிர் பாலைவனப் பகுதியில் மழைப் பொழிவு மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், தற்போது இயல்பை விட அதிகமாக, அங்கே மேக வெடிப்பு ஏற்படுவதும், கனமழை பெய்வதும் என, இயற்கையின் சீற்றம் அதிகரித்துள்ளதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Outlook வெளியிட்ட அறிக்கை ஒன்றில், நடப்பாண்டில் மட்டும் இமாச்சல பிரதேசத்தில் 2,760 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும், இது மிக அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 21 நாட்கள் மிகக் கடுமையான அனல் காற்று அங்கே வீசியுள்ளது. இப்படி இயல்புக்கு மாறான வானிலை மாற்றம் ஏற்பட்டு, மக்களை வாட்டி வருகிறது. இதன்காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மட்டும் எதிர்பாரா வகையில் 92.4% மழைப் பற்றாக்குறை அங்கு ஏற்பட்டிருக்கிறது, என்றும் கூறப்பட்டுள்ளது.
Translated by: Parthiban S